வரி உயர்வு :நெல்லை மாநகராட்சியை கண்டித்து அதிமுக ஒட்டிய கண்டன போஸ்டர்
திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அதிமுக மாநகர் மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் பரணி ஆறுமுகம் (எ) கார்த்திக் நெல்லை நகரம் முழுவதும் மாநகராட்சியை கண்டித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அதில், வஞ்சிக்காதே வஞ்சிக்காதே வாக்களித்த மக்களை வஞ்சிக்காதே. மக்களுக்கான மாநகராட்சியா மக்களை வதைப்பதற்கான மாநகராட்சியா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, அதிமுக மாநகர் மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் பரணி கூறுகையில்,
திருநெல்வேலி மாநகராட்சியில் வரும் திங்கட்கிழமை 10ஆம் தேதி நடைபெற உள்ள மன்ற கூட்டத்தில் குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக ஒரு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. குடிநீர் கட்டணம் 300 சதவீதமாக உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. இது தேவையில்லாதது . மக்கள் மீது திணிக்கப்படும் சுமை . தற்போது பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே இருக்கிறது. இது, 600 சதுர அடி வீடுகளுக்கு 7500 ரூபாயும், அதற்கு மேல் உள்ள வீடுகளுக்கு 40 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. இது மக்களை வதைக்கக்கூடிய வரி . மக்களால் எப்படி இந்த வரியை கட்ட முடியும். ஏற்கனவே இரண்டு முறை வரிகள் உயர்த்தியும் திருநெல்வேலி மாநகராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. இந்த வரி உயர்வை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். வரி உயர்வு தீர்மானம் நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் அதிமுக பொதுச்செயலாளர் அனுமதி பெற்று மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.