மகப்பேறு கால பிரச்னைகளுக்கு டாக்டர்கள் மட்டுமே காரணம் அல்ல- கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் அறிவுரை
திருநெல்வேலியில் அகில இந்திய அளவில் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர்களுக்கான *'சுடரி - 2025'* என்ற தலைப்பிலான மூன்று நாள் கருத்தரங்கம் (Conference) நடைபெற்று வருகிறது.
குழந்தைப்பேறு என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மிக முக்கியமான விஷயம். பெண்களுக்கான மகப்பேறு மருத்துவம் மற்றும் பெண்கள் நல மருத்துவத்தின் நவீன முன்னேற்றங்கள், புதிய அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் தீர்வுகள் குறித்து விவாதிப்பதற்காக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த பெண் மருத்துவர்களுக்காக இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கருத்தரங்கு குறித்து திருநெல்வேலி பெண் மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் மதுபாலா மற்றும் செயலாளர் டாக்டர் காயத்ரி ஆகியோர் கூறியதாவது:
"இந்தக் கருத்தரங்கு கவின்ஸ் மஹாலில் மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல்முறையாக திருநெல்வேலியில் எங்களால் திருநெல்வேலியில் பல்வேறு இடையூறுகளை தாண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, மருத்துவர்கள் இதுபோன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ள பல நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இப்போது மருத்துவர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களிலேயே இந்த விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
இதில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேச்சாளர்கள் பங்கேற்றுள்ளனர் . மகப்பேறு மருத்துவம் மற்றும் பெண்கள் நலன் சார்ந்த அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள பழமையான சிகிச்சை முறைகள் முதல் ஐவிஎஃப் (IVF), ஐ.யூ.ஐ (IUI) போன்ற நவீன முன்னேற்றங்கள், மற்றும் எளிய முறையில் கர்ப்பம் தரிப்பதற்கான வழிமுறைகள் வரை அனைத்தையும் மருத்துவர்கள் படித்து, விவாதிப்பதற்கான வாய்ப்பாக இது அமைந்துள்ளது. முதல்முறையாக திருநெல்வேலியில் ஏற்பாடு செய்திருந்தாலும், 425-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இது, மிகப்பெரிய வெற்றி . இத்தனை மகப்பேறு மருத்துவர்களுக்காக ஒரு சேவை செய்ய முடிந்தது, எங்களுக்குப் பெருமையாக உள்ளது' என்றனர்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்குக் கொடுக்க விரும்பும் எளிய அறிவுரை குறித்துப் பேசிய டாக்டர் காயத்ரி, "குழந்தைப்பேறு மருத்துவம் என்பது மிகவும் முக்கியமான, துரிதமாக முடிவெடுக்க வேண்டிய ஒரு நிலை. டெலிவரி என்பது நெடுஞ்சாலையில் (Highway) அதிவேக வாகனத்தை ஓட்டுவது போன்றது; ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். டெலிவரி என்பது கடைசி ஒரு நாளில் நடக்கும் முடிவு அல்ல. இது, பிறந்ததிலிருந்து ஒரு பெண் தனது உடல்நிலையை, உணவு முறையை, உடற்பயிற்சிகளைக் கடைப்பிடித்ததன் இறுதி விளைவு.முற்காலத்தில் இருந்த வாழ்க்கை முறை இப்போது இல்லை. எனவே, பெண்கள் தங்கள் உடலைப் பேணிக் காப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் இறக்கும் விகிதத்தைக் (Maternal Mortality) குறைப்பதே இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கம் . மகப்பேறு காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு மருத்துவர் மட்டுமே காரணம் கிடையாது, ஒட்டுமொத்த உடல்நலக் கோளாறுகளும் காரணமாக அமையலாம் 'என்றார்.