கடம்பாகுளம் தூர் வாரும் பணி தொடக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி
தாமிரபரணி நீரினை பயன் படுத்துவோர் சங்கம் மற்றும் மெகா பெளண்டேசன் தொண்டு நிறுவனம் இணைந்து கடம்பாகுளத்தை தூர்வாறும் பணியினை இன்று தொடங்கின.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏரல் பகுதியும் ஒன்றாகும். குறிப்பாக, இந்த பகுதியிலுள்ள பிரமாண்ட கடம்பாகுளத்தில் அமலை செடிகளின் ஆக்கிரமிப்பினால் மழை நீர் குளத்துக்கு செல்லாமல் ஊருக்குள் புகுந்தது. இதன் காரணமாக, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதை கருத்தில் கொண்டு கடம்பாகுளத்தை தூர் வார திட்டமிடப்பட்டது. தாமிரபரணி நீரினை பயன் படுத்துவோர் சங்கத்தின் தலைவர் குணா மற்றம் மெகா பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் தலைவர் நிமல் ராகவன் இணைந்து கடம்பாகுளத்தை தூர் வாறும் பணியை ஏரல் அருகேயுள்ள காரவிளையில் இன்று தொடங்கி வைத்தனர். பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முதல் கட்டமாக ஹிட்டாச்சி இயந்திரம் கொண்டு, அமலைச் செடிகள்மற்றும் முட்புதர்களை அகற்றும் பணி நடைபெற்றது.
சுமார், 5000 ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதி கொடுக்கும் கடம்பாகுளத்தில் 10 மடைகள் உள்ளது. இதில், 7, 9, 10 மடைகள் முதற்கட்டமாக மெகா பெளண்டேசன் தொண்டு நிறுவனம் தனியார் நிதி நிறுவனங்களின் பங்களிப்புடன் தூர் வாரும் பணியில் ஈடுபடுகிறது. இதனால், 20 கிராமங்களைச் சார்ந்த விவசாயிகள் பயன்பெறுவார்கள். மழை காலங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கும் பிரச்சனை இருக்காது . கரைகள் பலப்படுத்தப்படும். முதற்கட்டமாக கடம்பாகுளம் 7வது மடையில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திற்கும், அதன் பிறகு 9 மற்றும் 10 மடைகளில் தலா 5 கிலோ மீட்டர் தூரம் என மொத்தம் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு அமலைச் செடிகள் மற்றும் முட்புதர்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.