நாலுமாவடி செல்லும் பேருந்தில் இந்து பூசாரி ஏறியதால் சர்ச்சை? வள்ளியூரில் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் இருந்து நாகர்கோவில் புறப்பட்ட அரசு பேருந்து இன்று காலை திருநெல்வேலி பேருந்து நிலையம் வந்தது. பின்னர் , திருநெல்வேலி பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த பேருந்தில் வள்ளியூருக்கு செல்ல கோயில் பூசாரி ஒருவர் தன்னுடைய குடும்பத்தினருடன் ஏறியுள்ளார். வள்ளியூருக்கு பயண சீட்டு கேட்கும் போது கண்டக்டர்,வள்ளியூர் ஊருக்குள் போகாது என பூசாரியிடத்தில் கூறியுள்ளார். பேருந்தில் இருந்த மற்ற பயணிகளை நடத்துநரை இப்படி சொல்லும்படி கூறிதாகவும் தெரிகிறது. சக பயணிகள் நாலுமாவடியில் நடைபெற்ற கிறிஸ்தவ கூட்டத்திற்கு சென்று விட்டு இந்த பேருந்தில் திரும்பியதாக சொல்லப்படுகிறது.
ஆனால், பூசாரி குடும்பத்தினர் இந்த பேருந்து வள்ளியூர் செல்லக்கூடிய பேருந்து தானே..! நடத்துனர் இல்லாமல் இயக்கப்படும் பேருந்து மட்டும் தானே வள்ளியூர் ஊருக்குள் செல்ல கூடாது. மற்ற பேருந்துகள் ஊருக்கு செல்ல வேண்டும் என்று வாக்குவாதம் செய்துள்ளனர்.
ஆனால், நடத்துநர் வள்ளியூர் போகாது என அடாவடியாக பேசியுள்ளார். எனினும், அந்த குடும்பத்தினர் அதே பேருந்தில் பயணம் செய்தனர் . அப்போது, நடந்துநரும், மற்ற பயணிகளும் சேர்ந்து அந்த பூசாரி குடும்பத்தினரை வசை பாடியதாக சொல்லப்படுகிறது. சக பயணிகள் இவர்களை தாக்க முயன்றதாகவும் தெரிகிறது. இதையடுத்து, பேருந்து வள்ளியூர் ஊருக்குள் வந்து நின்ற போது, பூசாரி குடும்பத்தினர் பேருந்து முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.
தொடர்ந்து , போலீசார் வந்து சமாதானம் செய்தததையடுத்து, பேருந்து புறப்பட்டு சென்றது. இதனால் , வள்ளியூர் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மதரீதியாக ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்பட்ட நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.