சாக்கடை கழிவுநீரில் மிதக்கும் நெல்லை அன்புநகர்- குமுறும் மக்கள்

நெல்லை மாநகராட்சி 40 வது வார்டுக்கு உட்பட்ட அன்பு நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகேயுள்ள பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவு நீர் வெளியேறுகிறது. இதனால் அப்பகுதி சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் நடந்து செல்பவர்கள், கடந்து செல்பவர்கள் மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. சாலையில் பொங்கி வழியும் கழிவு நீர், அருகில் குடிநீர் குழாயை சுற்றி தேங்கி நிற்கிறது. இதனால் , குழாயில் குடிநீர் பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொங்கி வெளியேறும்கழிவு நீர், அருகிலுள்ள மழை நீர் கால்வாயில் சேர்கிறது. குடிநீர் குழாய், உடைந்துள்ளதால் வீட்டிற்கு வரும் குடிநீருடன் கழிவுநீரும் சேர்ந்து மிகவும் கலங்கலாக வருகிறது.

இது குறித்து அன்புநகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூறுகையில், 'நான் பிறந்தது முதலே இந்த பகுதி இப்படித்தான் காணப்படுகிறது. 20 வருடங்களாக அன்பு நகர் பகுதியில் இதுவரை எந்த ஒரு மேம்பாட்டு திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக இந்த சாலையே, இரண்டு முறை குடிநீருக்காகவும், இரண்டு முறை பாதாள சாக்கடை திட்டத்திற்காகவும் என நான்கு முறை தோண்டப்பட்டுள்ளது. ஆனால், நடுவில் மட்டும் சிறிய அளவில் சிமெண்ட் சாலை அமைத்து விட்டு சாலை போட்டு விட்டதாக கூறுகிறார்கள். சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மாலை நேரங்களில் அதிகமான கொசு தொல்லையால் இந்த பகுதியில் இருக்க முடியாது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் ! எங்கள் பகுதியில் நடக்க முடியாத அளவில் சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. எனவே அதற்கும் ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் ' என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்னை குறித்து 40 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வில்சன் மணித்துரையிடம் கேட்டபோது, 'பாதாள சாக்கடையை பராமரிக்கும் கேம்ஜெட் இயந்திரம் மாநகராட்சியிடம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளோம் . இதுவரை வரவில்லை . இன்று வந்துவிடும் எனக் கூறியிருக்கிறார்கள் . அந்த இயந்திரம் வந்ததும், உடனடியாக பாதாள சாக்கடை கழிவுநீர் பிரச்சனை சரி செய்யப்படும் ' என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

More News >>