களக்காடு அருகே பரபரப்பு: முதலிரவில் காதலனுடன் ஓடிய புதுப்பெண் , அப்புறம் நடந்த ட்விஸ்ட்

களக்காடு அருகே முதலிரவு தினத்தில் காதலனுடன் ஓடிப்போன புதுப்பெண்ணுக்கு, காதலனின் குடும்பத்தினர் அறிவுரை கூறி, அவரைப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே மூலைக்கரைப்பட்டி ஜெகஜீராம் தெருவைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 28), இவர் நெல்லையில் படித்து வருகிறார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் கைகூடாத நிலையில், சில நாட்களுக்கு முன்பு, இளம்பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நிலையில், முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த இளம்பெண் திடீரெனத் தனது காதலன் பாபுராஜைத் தொடர்புகொண்டு, தன்னைக் அழைத்து செல்லும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து, பாபுராஜ் தனது அண்ணன் அரவிந்த்ராஜ் (30) என்பவரை காரில் அழைத்துக்கொண்டு களக்காடு மெயின் ரோட்டுக்கு அதிகாலை 2.30 மணிக்கு வந்துள்ளர்.அங்கு , தயாராக நின்றிருந்த புதுப்பெண் ஓடிவந்து காரில் ஏறினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அரவிந்த்ராஜ், 'திருமணமான பெண்ணை அழைத்துச் செல்வது தவறு' என்று பாபுராஜிடம் எடுத்துரைத்தார். எனினும், காதலர்கள் இருவரும் அரவிந்த்ராஜ் சொன்னதை கேட்கவில்லை. தொடர்ந்து, அரவிந்த்ராஜை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, பாபுராஜ் தனது காதலியுடன் காரில் சென்றுவிட்டார்.

குடும்பத்தினரின் சமாதான முயற்சி:

தொடர்ந்து , அரவிந்தராஜ் நடந்த விவரங்களை பெற்றோரிடத்தில் கூறினார். இதனால், அதிர்ச்சியடைந்த பாபுராஜின் பெற்றோர், அவரிடத்தில் செல்போனில் நைசாகப் பேசி வீட்டுக்கு வரவழைத்தனர்.பின்பு, திருமணமான பெண்ணை அழைத்து வந்தது தவறு என்றும், உடனடியாக அவரைப் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். தொடர்ந்து, பாபுராஜும், அந்தப் பெண்ணும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, பாபுராஜின் அண்ணன் அரவிந்த்ராஜ், தாயார் சாந்தி, உறவினர் ஆறுமுக பெருமாள், அவரது மனைவி இசைமனோ, சேர்மக்கனி ஆகியோர் இளம்பெண்ணை காரில் அழைத்துக்கொண்டு பெற்றோரிடத்தில் ஒப்படைக்க சென்றனர்.

*கார் கண்ணாடி உடைப்பு - வழக்குப்பதிவு

இளம்பெண்ணைப் பாபுராஜின் குடும்பத்தினர் அழைத்து வருவதை அறிந்த பெண்ணின் அண்ணன் கதிர்வேல்ராஜா, உறவினர் ராஜா உட்பட 4 பேர் கையில் கம்பு, கற்களுடன் அங்கு வந்தனர். பின்னர், ஆவேசத்துடன் காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். உயிருக்குப் பயந்த காருக்குள் இருந்த அரவிந்த்ராஜ் உட்பட 5 பேரும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்தனர். இதுகுறித்து , களக்காடு போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காருக்குள் இருந்த 5 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து அரவிந்த்ராஜ் அளித்த புகாரின் பேரில், இளம்பெண்ணின் அண்ணன் கதிர்வேல்ராஜா உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலர் பாபுராஜின் தந்தை போலீஸ்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>