70 வயதான பாட்டியை மருத்துவமனையில் வீசி விட்டுச் சென்ற பேரன்! - அம்பையில் நெஞ்சை உலுக்க வைத்த சம்பவம்
அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை அருகே, சுமார் 70 வயது பெண்ணை அவரது பேரன் நடுரோட்டில் வீசி விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி செட்டி பிள்ளைமார் தெருவை சேர்ந்தவர் வேலம்மாள். இவரின் கணவர் பெயர் கிருசாமி. இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்டார். இந்த தம்பதிக்கு பேச்சியம்மாள் என்ற மகளும், சுப்பிரமணியன் என்ற மகனும் உள்ளனர். கல்லிடைக்குறிச்சியில் உள்ள முத்து என்பவரின் வீட்டில் வேலம்மாள், அவரது பேரன் மற்றும் மகள் ஆகியோர் வாடகைக்கு இருந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வேலம்மாளின் உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே , பாட்டியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த பேரன், நேற்று முன்தினம் (நவம்பர் 14) பகல் 11 மணியளவில், அவரை மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆம்புலன்ஸ் நிறுத்தம் அருகே தனியாக விட்டுச் சென்றுவிட்டார்."இனிமேல் உன்னை பார்த்துக்கொள்ள முடியாது"* என்று கூறிவிட்டு, பேரன் சென்றதாக சொல்லப்படுகிறது.
சுமார் இரண்டு நாட்களாக அங்கேயே வேலம்மாள் கிடந்துள்ளார். தகவல் அறிந்ததும், கிராம நிர்வாக உதவியாளர்மற்றும் வருவாய் ஆய்வாளர் இசக்கியப்பன், துணை வட்டாட்சியர் சீதாதேவி உள்ளிட்டோர் நேரில் சென்று வேலம்மாளிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, வேலம்மாளை முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தினரை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.