கார் டிரைவருடன் சேர்ந்து கொண்டு கணவர் மீது புகார் : திசையன்விளை பேரூராட்சி தலைவி தலைமறைவு
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி தலைவியாக இருந்து வருபவர் ஜான்சி ராணி. இவரது கணவர் முருகானந்தம். நெல்லை மாவட்டத்தில் அதிமுக கைப்பற்றிய ஒரே பேரூராட்சி திசையன்விளைதான். அதுவும் குலுக்கல் முறையில் தான் வெற்றி பெற்றார். கடந்த , நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு ஜான்சி ராணி தோல்வியடைந்தார். மேலும் , தேர்தலில் அதிக அளவில் செலவு செய்து கோடி கணக்கில் கடனாளியாக மாறியுள்ளார். பேரூராட்சி தலைவி ஜான்சி ராணியிடம் டிரைவராக பிரேம்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். தேர்தலின் போது , பிரேம்குமார் அவருடைய வீட்டை 28 லட்ச ரூபாய்க்கு விற்று அந்த பணத்தை ஜான்சி ராணிக்கு கொடுத்ததாக தெரிகிறது.
இதில் 20 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே, மீதி பணத்தை திருப்பி கேட்ட போது பிரேம்குமாருக்கும் ஜான்சிராணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஜான்சி ராணியின் கணவரான முருகானந்தம் கார் டிரைவர் பிரேம்குமாரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து பிரேம்குமார் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் நான்கு பிரிவுகளின் கீழ் ஜான்சி ராணியின் கணவரான முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தன்னுடைய கணவர் முருகானந்தம் தன்னையும் தாக்கியதாகவும் ஜான்சி ராணி திசையன்விளை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அதோடு, ஜான்சி ராணி தலைமறைவாகியும் விட்டார். இதனால், திசையன்விளை பேரூராட்சி மன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட அதிமுக கழக இணை செயலாளராகவும் ஜான்சிராணி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கார் ஓட்டுநருடன் சேர்ந்து கொண்டு, தன்னுடைய கணவர் மீதே ஜான்சிராணி புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.