சண்டாலிப்பையன் என்கிறார்கள் : நெல்லை கலெக்டரிடம் மாற்றுத்திறனாளி கண்ணீர்
திருநெல்வேலி மாவட்டம் சி. என் கிராமத்தை சேர்ந்தஐயப்பன் என்பவர் இன்று தனது மாற்றுத்திறனாளி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், கூறியிருப்பதாவது,
"எனது தந்தை ஆறுமுகம் 1992 ஆம் ஆண்டும், எனது தாய் மல்லிகா 2025ம் ஆண்டும் காலமானார்கள். எங்களுடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் என மொத்தம் 8 பேர் உள்ளோம். இதில் நான் மட்டுமே மாற்றுத்திறனாளி. மற்ற 7 பேரும் நல்ல நிலையில் வசதியுடன் இருக்கிறார்கள். எனது பெற்றோருக்குச் சொந்தமான சொத்தைப் பிரிப்பதில் எனது சகோதரர்கள் அனைவரும் எனக்கு பங்கு அளிக்க மறுத்து வருகின்றனர். மேலும், என்னுடைய மாற்றுத்திறனாளிக் குறைபாட்டை சுட்டிக் காட்டி, என்னைச் 'சண்டாலிப் பையன்' என்று இழிவான வார்த்தைகளால் பேசி அவமதிக்கின்றனர்.
நான் என்னுடைய பிறப்புச் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்கள் அனைத்தையும் காண்பித்தும், அவர்கள் சொத்தைப் பிரித்துக் கொடுக்க மறுக்கின்றனர். இதன் காரணமாக, எனக்குச் சொந்தமாக 3 சென்ட் நிலம் மட்டுமே என்னிடத்தில் உள்ளது. என்னுடைய குடும்பம் வறுமையில் வாடுகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் இந்தச் சொத்துத் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். எனது பரிதாப நிலையைப் பரிசீலித்து, எனது குடும்பத்துக்குச் சேர வேண்டிய சொத்தை முறைப்படி விசாரித்து, எனது குடும்ப நலனுக்காகப் பிரித்து வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு , மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மனு மீது மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் ஐயப்பன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.