எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட தேர்தல் பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக வருவாய்த்துறை ஊழியர்கள் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் உள்ள பணி நெருக்கடிகளைக் கண்டித்து, நாளை (நவ.18) முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். 

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பான 'ஃபெரா' (FERA) சார்பில் நடந்த அவசர உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய்துறை அலுவலர்கள் கூறியதாவது,

''வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (S.I.R.) உரிய திட்டமிடல் இல்லாமலும், போதிய பயிற்சிகள் வழங்கப்படாமலும் அவசர கதியில் மேற்கொள்ளப்படுகின்றன. கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு ஏதும் வழங்காமல், அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் இந்தக் கூடுதல் பணிகளை மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறது.

இதனால் ,வருவாய்த்துறை அலுவலர்களுக்குக் கடுமையான பணி நெருக்கடிகளும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. சில மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் சார்நிலை அலுவலர்களை வதைப்பதாகவும், இதை உடன் கைவிட வேண்டும். இது குறித்து ஏற்கெனவே தமிழக தலைமைத் தேர்தல் அலுவலரிடம் முறையீடு செய்யப்பட்ட பின்னரும் நிலைமை மாறவில்லை . இதை கண்டித்து நாளை (நவ.18 ) முதல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முற்றாகபுறக்கணிக்கிறோம். படிவங்கள் பெறுதல், இணையத்தில் பதிவேற்றம் செய்தல் , எஸ்.ஐ.ஆர்  ஆய்வுக் கூட்டங்களையும் புறக்கணிக்கிறோம். போராட்டத்தில் அனைத்து கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவர் முதல் ஆய்வாளர் வரை, அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் (தாசில்தார்) வரை என அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களும் முழுமையாக ஈடுபட உள்ளனர்.மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) பணியை மேற்கொள்ளும் சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர் '' என்கின்றனர். 

வருவாய்த்துறையினரின் போராட்ட அறிவிப்பு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் பெரும் தொய்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

More News >>