ஏரலில் தனியார் நிதி நிறுவனத்தில் நகையை பறிகொடுத்த மக்கள் : சாலை மறியலால் பரபரப்பு

ஏரலில் தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகைகளை மீட்டு தரக்கோரி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் திருநங்கைகள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுமார் 90 லட்சம் மதிப்பில் தங்க நகைகளை அடமானம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. நகையை அடமானம் வைத்தவர்கள் அவர்களின் நகைகளை திருப்புவதற்காக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திற்கு கடந்த மாதம் சென்றுள்ளனர். ஆனால் , நிதி நிறுவனத்தை நடத்தி வந்த சாத்தான்குளம் நாடார் தெருவை சேர்ந்த சுடலை முத்து என்பவரின் மகன் சிவசுப்பிரமணியன் நகைகளை கொடுக்கவில்லை. இதனால், நகைகளை இழந்தவர்கள் நிதி நிறுவனம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சிவசுப்பிரமணியனை பிடித்து ஏரல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக, ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்துவரும் நிலையில் நேற்று திடீரென திருநங்கைகள் மற்றும் நகைகளை இழந்தவர்கள் ஏரல் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவசுப்பிரமணியனுடன் அவரது தந்தை, தாயார் ,தம்பி அவரது நண்பர் என இன்னும் நான்கு நபர்கள் கைது செய்யப்படாமல் உள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும் .நகைகளை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு நாட்களுக்குள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

More News >>