தி.மு.க. தூண்டிவிடுகிறது! - வருவாய்த்துறையினர் போராட்டம் குறித்து நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
வ.உ.சிதம்பரனாரின் 89ஆவது நினைவு நாளை முன்னிட்டு, இன்று (நவ. 18) திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
"சுதந்திரப் போராட்ட வீரர் சிதம்பரனாருக்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமைப்படுகிறோம். பிரதமர் மோடி அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவப்படுத்துவதில் முதல் ஆளாக இருப்பவர். திருநெல்வேலி மக்களுக்குத் நான் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை (S.I.R.) எதிர்த்து வருவாய்த்துறையினர் போராட்டம் அறிவித்துள்ளனர். தி.மு.க. அரசுதான் வருவாய்த் துறையினரைத் தூண்டிவிட்டு வேலை பார்க்கிறது. வருவாய்த் துறையினர் அரசு மீது அதிக கோபத்தில் உள்ளனர்.தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களைத் தி.மு.க. அரசு அடித்து மிரட்டினர். தற்போது அவர்களுக்குச் சோறு கொடுக்கிறார்கள். சோறு கொடுத்தால் மட்டும் போதுமா?
சபாநாயகர் அப்பாவு, "பா.ஜ.க.வும் விஜய்யும் கூட்டு வைத்துதான் வேலை செய்கிறார்கள் என்று கூறியுள்ளார். சபாநாயகர் அப்பாவுவின் விருப்பம் நிறைவேறும். கூட்டணி பற்றி ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகுதான் தெரியும். அதன் பிறகு அறிவிப்போம்" என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார். பீகார் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், அங்கு வெறும் 2% வாக்கு மட்டுமே வாங்கி இருக்கிறார். இதேபோல்தான் தமிழகத்திலும் தமிழக வெற்றி கழகத்திற்கு நிலை ஏற்படும் ''என்றார்.