அப்பர் கோதையாறில் நடந்த சோகம் : கூடலூர் ராதாகிருஷ்ணன் யானை கனமழையில் வழுக்கி விழுந்து பலி!

நீலகிரியிலிருந்து திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட 'ராதாகிருஷ்ணன்' என்ற ஆண் யானை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் (KMTR) அப்பர் கோதையாறு பகுதியில் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டது. அதே பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 20 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்ததில், யானை உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை அப்பர் கோதையாறு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள மண் மற்றும் பாறைப் பகுதிகள் மிகவும் ஈரப்பசையுடனும், வழுக்கும் தன்மையுடனும் இருந்தது. இந்தச் சூழ்நிலையில், யானை 'ராதாகிருஷ்ணன்' சுமார் 20 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்துள்ளது. இதில், யானையின் வாய் மற்றும் தும்பிக்கை பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் இரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இது, யானையின் மரணத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

ராதாகிருஷ்ணன்' யானை தனது புதிய வாழ்விடமான KMTR பகுதியில் நன்றாகவே வாழ்ந்து வந்துள்ளது. அதற்கு, தேவையான அனைத்து உணவு , தண்ணீர் அதிகமாகவே கிடைத்தது. இதனால், யானை இயல்பாகவே நடமாடி வந்தது. அதன், திடீர் இறப்பு வனத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்த 'ராதாகிருஷ்ணன்' யானை, நீலகிரி மாவட்டத்தில் 12 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக சொல்லப்பட்டது.

தொடர்ந்து, 100 வனத்துறை ஊழியர்கள் சேர்ந்து இந்த யானையை பிடித்தனர். முதுமலை முகாமில் அதற்கு, ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. பின்னர், திருநெல்வேலிக்கு கொண்டு வந்து அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

இது குறித்து வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகுவை தொடர்பு கொண்டு கேட்ட போது, யானை 'ராதாகிருஷ்ணன்' இறந்த தகவலை அவரும் உறுதிப்படுத்தினார்.

யானையின் மரணம் குறித்து வனத்துறையினர் மேலும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே யானையின் மரணத்திற்கான முழுமையான காரணங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>