திமுகவுக்கு எதிரான கேள்வி பிரஸ்மீட்டுக்கு எண்ட்கார்ட் போட்ட வைகோ!
சென்னையில் நேற்று செய்தியாளர்கள் திமுகவுக்கு எதிரான கேள்வி எழுப்பியதால், சட்டென்று பேட்டியை முடித்த வைகோ பாதியில் கிளம்பினார்.
ஆர்.கே. நகர் ,இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் மருதுகணேசுக்கு மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. வைகோவை நேற்று சந்தித்த மருதுகணேஷ் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டியளித்த வைகோ கூறியதாவது ''ஆதரவு தெரிவித்ததற்காக ஸ்டாலின் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு நன்றி கூறினார். அடுத்து வரும் மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன். தமிழகத்தின் வருங்கால நலனைக் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளேன்'' என்றார்.
இந்த சமயத்தில் குறுக்கிட்ட செய்தியாளர்கள், 'கடந்த தேர்தல்களில் திமுகவுக்கு எதிரான கூட்டணியில் மதிமுக இருந்தே' என்று கேள்வியை எழுப்பினர். இதனால், சற்று திணறிய வைகோ, ''இந்த சமயத்தில் நல்லதையே பேசுவோம். நல்லவற்றையே சிந்திப்போம்'' என்று கூறி பிரஸ்மீட்டுக்கு பாதியிலேயே 'எண்ட் கார்ட் ' போட்டு முடித்தார்.