கன்னியாகுமரி : கருகி போன மரக்கன்றுகளுக்கு ஒட்டு போட்டு, அதிகாரிகளை ஏமாற்றிய ஊராட்சி அலுவலர்கள்
கன்னியாகுமரி அருகே, பட்டு போன மரகன்றுகளுக்கு மேல் பெரிய மரக்கன்றுகளை கட்டி வைத்து , ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை ஏமாற்றிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அருகே காட்டாத்துறை ஊராட்சிக்குட்பட்ட இட்டாகுளம் பகுதி உட்பட பல பகுதிகளில் மரங்களை நட்டு பராமரிக்க 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசு புறம்போக்கு இடங்களான சாலையோரங்கள் ,குளம் ,ஓடை கரைகளில் மா,பாலா உட்பட பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது .
கன்றுகளை முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிக்கவில்லை. இதனால, பல மரக்கன்றுகள் கருகி விட்டன. இந்த நிலையில் , அதிகாரிகள் ஆய்விற்காக வருவதை அறிந்த ஊராட்சி அலுவலர்கள் நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்களை கொண்டு, மாந்தோப்பு உட்பட பல மரக்கிளைகளை ஒடித்து வந்து, காய்ந்து கருகி போய் நின்ற மரக்கன்றுகள் மேல் கட்டி வைத்துள்ளனர். பின்னர்,கன்று நன்றாக வளர்ந்து விட்டதாக ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் காட்டியுள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக இந்த பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் ரஞ்சித் ஆகியோர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். எனவே, அதிகாரிகள் முறையான ஆய்வுகள் நடத்தி விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்