ஹவாய் குலுங்கியது... எரிமலை வெடித்தது
கிலேவியா, ஹவாய் தீவில் உள்ள எரிமலைகளுள் இளையது மட்டுமல்ல, துடிப்பானதும் கூட. அடிக்கடி வெடித்து, எரிமலை குழம்பினை கக்கக்கூடியது இது.
கடந்த வியாழன்று காலை ஹவாய் தீவை 5 ரிக்டர் சக்தியுள்ள நிலநடுக்கம் தாக்கியது. அதன் பின் சில மணி நேரம் கழித்து கிலேவியா எரிமலை வெடித்தது. அதைத் தொடர்ந்து அவ்வப்போது தீவு நிலநடுக்கத்தால் குலுங்கிக் கொண்டே இருந்தது. ஹவாய் நேரப்படி, வெள்ளிக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் எரிமலைக்கு தெற்கேயுள்ள பகுதியை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. சிறிது நேரம் கழித்து 6.9 ரிக்டர் அளவிலான பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த நாற்பதாண்டு காலத்தில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம் இதுவாகும். இதற்கு முன்பு 1975-ம் ஆண்டு 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளில் வீடுகள் அதிர்வதும், கடைகளில் உள்ள பொருட்கள் விழுவதும் பதிவாகியுள்ளது.
எரிமலை வெடிக்கும்போது வெளியாகும் குழம்பு மற்றும் கந்தக டைஆக்ஸைடு வாயு காரணமாக, மக்கள் பாதிக்கப்பட்ட பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். வெள்ளியன்று பிற்பகலில் லெய்லானி எஸ்டேட் மற்றும் லானிபுனா கார்டன்ஸ் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வெளியேறி அங்குள்ள தேவாலயம் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் அமைத்துள்ள தங்குமிடத்தில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com