நெல்லை சுசி கார் ஷோரூம் மேலாளருக்கு அடி உதை : மற்றொரு ஷோரூம் உரிமையாளர் வெறிச்செயல்

திருநெலவேலியில் தனியார் கார் ஷோரூம் ஒன்றில், புகுந்து மேலாளரை மிரட்டி, நிறுவனத்தின் பொருட்களை அடித்து உடைத்தத புகாரில் மற்றொரு கார் ஷோரூம் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் சுசி பழைய கார் விற்பனை நிறுவனம் உள்ளது. இங்கு வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 42) என்பவர் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 18-ம் தேதி மேலப்பாளையம் சேவியர் காலனியைச் சேர்ந்த ராபின்சன் (41) அவரது நண்பர்கள் இருவர் ஷோரூமிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். பின்னர், மேலாளர் சுப்பிரமணியனிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த கணினி உள்ளிட்ட அலுவலகப் பொருட்களையும் அடித்துச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலாளர் சுப்பிரமணியன் உடனடியாகப் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நேற்று (நவ. 20) தகராறில் ஈடுபட்ட நபர்களில் ஒருவரான ராபின்சனை கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராபின்சன்,மேலப்பாளையம் தெற்கு பைபாஸ் சாலையில் ராபின் கார் என்ற பெயரில் பழைய கார்களை விற்கும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். தொழில் போட்டி காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது.

ஷோரூமிற்குள் அத்துமீறி நுழைந்து, பொருட்கள் அடித்து உடைக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி (CCTV) கண்காணிப்புக் கேமராப் பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>