நெல்லை காலை வாறும்: நாங்குநேரி பக்கம் நயினார் காற்று!

நெல்லை தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரன் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை ஏற்கனவே, தொடங்கி விட்டார். தற்போது , திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏவான ஏ.எல்.எஸ் லக்‌ஷ்மணனை 23 ஆயிரம் சொச்ச வாக்குகள் வித்தியாசத்தில் நயினார் நாகேந்திரன் தோற்கடித்தார். அதோடு, நெல்லை தொகுதியில், கடந்த 2001, 2011 ஆகிய ஆண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். இந்த முறை பாஜக கட்சித் தலைவராக வேறு அவர் தேர்தலை எதிர்கொள்கிறார். இதனால், வெற்றி பெற வேண்டிய நிர்பந்தத்தில் அவர் உள்ளார்.

அதே வேளையில், நெல்லை இந்த முறை நயினாருக்கு சாதகமாக இருக்காது என்கிற தகவலும் அவருக்கு கிடைத்துள்ளது. இதனால், வரும் தேர்தலில் நெல்லை தொகுதியை கைவிட , நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. காரணம், நெல்லை தொகுதியில் யாரும் தொடர்ச்சியாக இரு முறை வெற்றி பெற்றதில்லை. இதுதான், நெல்லையின் வரலாறு. இன்னொன்று, நயினார் நாகேந்திரன் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். ஜோதிடர்களும்' இந்த முறை நெல்லை தொகுதி உங்களுக்கு சாதகமாக இருக்காது 'என்று எச்சரித்துள்ளனர்.

எனவே, தொகுதி மாறுவது தான் சரி என்ற முடிவிற்கு அவர் வந்துள்ளதாக தெரிகிறது. எனவே, பக்கத்திலுள்ள நாங்குநேரி தொகுதியில் களம் காண முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏவாக உள்ளார்.

ஏற்கனவே, நெல்லை தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் , கட்சி நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால்,எப்படியும் திமுகவினர் நயினாரை தோற்கடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு அலைவார்கள். இதுவும், நயினார் நாகேந்திரனின் முடிவுக்கு ஒரு காரணமென்று விஷயம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

More News >>