போதை தடுப்பு விழிப்புணர்வு ரீல்ஸ் : வெற்றி பெற்றவர்களுக்கு நெல்லை காவல்துறை பரிசு
நெல்லை மாநகரம் முழுவதும் போதைப்பொருள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தமிழக அரசின் drugfreetn செயலி பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், ரீல்ஸ் போட்டி ஒன்றை கடந்த அக்டோபர் மாத இறுதியில் நெல்லை மாநகர காவல்துறை அறிவித்திருந்தது.
இந்த போட்டிக்கு நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் தங்கள் படைப்புகளை அனுப்பி இருந்தனர் அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நபர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.
நெல்லையை சேர்ந்த ரசிகவ் ஞானியார் என்பவர் உருவாக்கிய ரீல்ஸ்க்கு முதல் பரிசு 5, 000 , ரஹ்மத் நகர் முஹம்மத் இஸ்மாயில் ஐ.டி.ஐ குழுவினர் தயாரித்த குறும்படத்திற்கு இரண்டாம் பரிசு 3, 000 சாராள் டக்கர் கல்லூரி மாணவிகள் தயாரித்த குறும்படத்திற்கு மூன்றாம் பரிசு 2, 000 வழங்கப்பட்டது. அதோடு, 15 பேருக்கு ஆறுதல் பரிசு மற்றும் சான்றிதழ்கள் நெல்லை செந்தூர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்டது.
பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை திருநெல்வேலி மாநகர மேற்கு காவல் துணை ஆணையர் பிரசண்ண குமார், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் தலைமையிடம் விஜயகுமார் மற்றும் செந்தூர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைமை மருத்துவர் சதீஷ்குமார் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியிர் முதல் மூன்று பரிசு பெற்ற குறும்படங்கள் திரையிடப்பட்டன . கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருநெல்வேலி மாநகர காவல் துறையின் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் இந்திரா மற்றும் குழுவினர் இணைந்து செய்திருந்தனர்.