நாங்கள் கட்சி நடத்துகிறோம் யாரிடமும் திருடவில்லை - ஸ்ரீபிரியா

மக்கள் நீதி மய்யத்தின் கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருச்சியில் நடந்தது. கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா மற்றும் சவுரிராஜன் தலைமையில் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை என முக்கியமான விஷயங்களை பற்றி பேசப்பட்டது.

கூட்டத்திற்கு பின் ஸ்ரீபிரியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் எல்லா நடவடிக்கைகளும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மாதிரி கிராம சபை கூட்டங்கள் சுயநலன் சார்ந்து நடந்து வந்ததை மாற்றி மக்களின் நலன் சார்ந்த வகையில் மக்களை தட்டி எழுப்பியுள்ளோம்.

மக்கள் நீதி மய்யத்தில் படித்தவர்களுக்கும், அனுபவசாலிகளுக்கும் எப்போதும் இடம் உள்ளது. பெண்கள் அதிக அளவில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து வருகிறார்கள். குறிப்பாக 18 முதல் 35 வயதுடையவர்கள் அதிகம் இணைகிறார்கள். மேலும் முதியோர்களிடம் இருந்து அதிக வரவேற்பு உள்ளது. மக்கள் நலன் மட்டுமே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கையாகும்.

தமிழகம், மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்து விட்டு, அரசியல் கட்சி தொடங்கி பணியாற்றுவதற்கு பதிலாக அரசியல் கட்சியை அறிவித்து விட்டு சிறப்பாக பணிபுரியும் நபர்களை கண்டறிந்து மாவட்ட நிர்வாகிகளாக நியமனம் செய்யவுள்ளோம்.

மக்களை பாதிக்கும் போராட்டங்களை நடத்துவதிலோ, காலை உணவு சாப்பிட்டு விட்டு வந்து, மாலையில் ஜூஸ் குடித்து போராட்டங்களை முடிக்கும் உண்ணாவிரதத்திலோ எங்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. மக்கள் துயரப்படும் நிலையில் அவர்களது முன்னேற்றத்துக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். காவிரி பிரச்னை, ஸ்டெர்லைட், நீட் தேர்வு என தமிழகத்தின் நலனுக்கு எதிராகவும், தமிழக மக்களுக்கு எதிராகவும் உள்ள மத்திய, மாநில அரசின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறோம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தி வரும் பணம் மூலம் கட்சி நடத்துவதில் தவறில்லை. உழைத்து சம்பாதித்த பணத்தில்தான் கட்சி நடத்துகிறோம், யாரிடமும் திருடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>