கயத்தாறில் மனைவியின் சகோதரர் வெட்டிக் கொலை : சிறையில் இருந்து வெளியே வந்தவர் வெறிச்செயல்

கயத்தாறு அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக டாஸ்மாக் பாரில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த மற்றொருவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோமு (வயது 55). விவசாயியான இவர், ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சுமார் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தார். சமீபத்தில்தான் விடுதலையாகி வெளியே வந்துள்ளார்.

கோமுவுக்கும் அவரது மனைவி தங்கத்தாய்க்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் , மனவருத்தமடைந்த தங்கத்தாய், கணவரைப் பிரிந்து தனது மகன் மாடசாமி வீட்டில் வசித்து வந்துள்ளார். தனது மனைவி பிரிந்து சென்றதற்கு, தங்கத்தாயின் சகோதரரான முருகன் (57) தான் காரணம் என கோமு கருதியுள்ளார். இதனால், முருகன் மீது கோமு கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், முருகன் மற்றும் அவரது உறவினரான (மனைவியின் தங்கை கணவர்) மந்திரம் ஆகியோர் கயத்தாறு அருகே உள்ள தளவாய்புரம் டாஸ்மாக் கடை பாருக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த கோமு, மறைத்து வைத்திருந்த அரிவாளால் முருகனைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதைத் தடுக்க முயன்ற மந்திரத்தையும் அவர் வெட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து கோமு தப்பியோடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தலையில் பலத்த வெட்டுக் காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மந்திரம், மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மந்திரமும் பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மைத்துனர் மற்றும் உறவினரை முன்னாள் ஆயுள் தண்டனை கைதி வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கயத்தாறு போலீஸார், தலைமறைவாக உள்ள கோமுவை வலைவீசித் தேடி வருகின்றனர்.

More News >>