அப்பவு திறந்த தண்ணீரும் விவசாயிகளின் கண்ணீரும்!
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வறண்ட பகுதிகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் லட்சியத் திட்டமான 'வெள்ளநீர் கால்வாயில்' உடைப்பு ஏற்பட்டுள்ளது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராதாபுரம் பகுதிக்குச் செல்ல வேண்டிய உபரி நீர், கால்வாய் உடைப்பால் வயல்களுக்குள் புகுந்து வீணாகி வருகிறது.
தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் மூலம், தாமிரபரணியில் கடலில் கலக்கும் உபரி நீரை வறண்ட பகுதிகளான ராதாபுரம், நாங்குநேரி மற்றும் சாத்தான்குளம் பகுதிகளுக்குத் திருப்புவதே இந்த வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் நோக்கமாகும். கடந்த 5 நாட்களாகப் பெய்த கனமழையால், நெல்லை வெள்ளங்குளி பகுதியிலிருந்து வினாடிக்கு 3,200 கன அடி தண்ணீர் இந்தக் கால்வாயில் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீரை இன்று சபாநாயகர் அப்பாவு, ராதாபுரம் அருகேயுள்ள காரியாண்டி பகுதியில் மலர்தூவி வரவேற்றுத் திறந்து வைத்தார்.
சபாநாயகர் தண்ணீரைத் திறந்து வைத்தாலும், மறுபுறம் கால்வாயின் திடியூர் பகுதியில் ஷட்டர் அருகே கால்வாய் உடைந்து போனது. இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயி சண்முகராஜா கூறுகையில், "திடியூர் பகுதியில் அமைந்துள்ள கால்வாயின் இடதுபுறம் சுமார் 200 மீட்டர் தூரத்திற்குத் தடுப்புச் சுவரில் அமைக்கப்பட்ட கான்கிரீட் தளங்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. இதனால் தண்ணீர் வரும் வேகத்தில் கான்கிரீட் பெயர்ந்து, தண்ணீர் முழுவதுமாக வெளியேறி அருகில் உள்ள வயல்களுக்குள் பாய்கிறது.
கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, ராதாபுரம் பகுதிக்குச் செல்ல வேண்டிய தண்ணீர் திசைமாறி, பெரியாறு வழியாக மீண்டும் கடலுக்கேச் சென்று வீணாவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த உடைப்பால் திடியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவிலான நெல் விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. பயிர்கள் நடவு செய்யப்பட்டு வளர்ந்து வரும் நிலையில், தற்போது புகுந்துள்ள வெள்ளத்தால் பயிர்கள் அழுகி நாசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
கால்வாய் அமைக்கும் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும், தண்ணீர் வந்து கொண்டிருக்கும்போதே சரி செய்ய முயல்கிறார்களே தவிர, நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. கசிவு பெரிதாகி உடைப்பு ஏற்பட்டால் ராதாபுரத்திற்குச் சொட்டு நீர் கூட போகாது, அனைத்தும் வயலுக்குள் புகுந்து ஊரே அழிந்துவிடும்," என்றார்.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, உடைப்பைச் சரி செய்து தண்ணீரை உரிய இடத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.