நெல்லையில் ரூ.35 கோடியில் கட்டப்பட்ட பொருநை அருங்காட்சியகம்! - டிசம்பரில் திறப்பு
தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், திருநெல்வேலியில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், வரும் டிசம்பர் மாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனைத் திறந்து வைப்பார் என்றும் தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை கே.டி.சி நகர் அருகே அமைக்கப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகப் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
"தமிழ் பெருங்குடி மக்களின் தொன்மை நாகரிகத்தை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக, முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மூலமாகப் பல்வேறு இடங்களில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் கிடைக்கப்பெற்ற பழம்பொருட்கள் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், தமிழ் மக்களிடமும், வரலாற்று அறிஞர்களிடமும், பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அமையவுள்ளது.
பொருநை நதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த தமிழர்களின் நாகரிகத் தொன்மையை கண்டுபிடிக்க சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை மற்றும் துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு கிடைத்த பழமையான பொருட்களைத் திருநெல்வேலியில் அழகுறக் காட்சிப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஆணையிட்டார்.
இதற்காக ஏறத்தாழ 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. தற்போது 95 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களைக் காட்சிப்படுத்தும் (Display) பணிகள் தற்போது நடந்து வருகின்றன.வரும் டிசம்பர் மாதத்தில் முதலமைச்சர் இந்த அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளது.
பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கு வரும்போது, அவர்கள் அருங்காட்சியகத்தோடு ஒன்றிணைந்து (Interact) தகவல்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ளும் அளவிற்குப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன ''என்றார்
'தமிழர் பண்பாட்டில் இரும்புக்காலத்தை முன்னிலைப்படுத்தும் சான்றுகள் உள்ளதா?' எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், "இரும்புக்காலத்தின் தொன்மை என்பது தமிழ் மரபில், தமிழ்நாட்டின் மண்ணில்தான் துவங்கியது என்பதை நாம் ஏற்கனவே ஆய்வு பூர்வமாகச் சுட்டிக்காட்டி இருக்கிறோம். அதற்கான ஆய்வுத் தரவுகளின் முடிவுகள் தமிழ்நாட்டின் பல இடங்களில் கிடைத்துள்ளன. எனவே, நம்முடைய பொருநை அருங்காட்சியகத்திலும் இதுகுறித்த செய்திகள் மற்றும் சான்றுகள் இடம்பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன" என்று உறுதியளித்தார்.
ஆய்வின்போது பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன் கான், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் உடனிருந்தனர்.