நெல்லை: காவல்கிணறுவில் அரசு வணிக வளாகத்துக்கு கலைஞர் பெயர்: பாஜக கடும் போராட்டம்
காவல்கிணறு பகுதியில் தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள மலர் மற்றும் வணிக வளாகத்திற்கு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி (கலைஞர்) பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நெல்லை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் தமிழ்ச் செல்வன் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காவல்கிணறு பகுதியில், விவசாயிகளின் நலனுக்காகவும் வணிக வளர்ச்சிக்காகவும் தோட்டக்கலைத் துறை மூலம் மலர் மற்றும் வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டது. இந்த வணிக வளாகத்திற்கு அண்மையில் தமிழக அரசு சார்பில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு. கருணாநிதியின் (கலைஞர்) பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பகுதி ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழகச் சபாநாயகருமான மு.அப்பாவு அவர்கள் இந்த வணிக வளாகத்தின் பெயர்ப் பலகையில், அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசியல் தலைவரின் பெயரைச் சூட்டியதாக பாஜக குற்றம் சாட்டியது. இதையடுத்து, கலைஞர் பெயர் சூட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசையும், சபாநாயகர் அப்பாவுவையும் கண்டித்தும் இன்று (டிசம்பர் 2, 2025) பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
நெல்லை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் தமிழ்ச் செல்வன் மற்றும் தமிழக பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் அசோக் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். "பொதுமக்கள் விரும்பிய பெயரைச் சூட்ட வேண்டும்!", "சபாநாயகர் அப்பாவுவுக்குக் கண்டனம்!" போன்ற முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் வணிக வளாகம் அமைந்துள்ள பகுதியை நோக்கிச் செல்ல முயன்றனர். போராட்டம் காரணமாகச் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, காவல்கிணறு பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
காவல்துறையின் தடையை மீறி பாஜகவினர் வணிக வளாகத்திற்குச் செல்ல முயன்றதால், காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நெல்லை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் தமிழ்ச் செல்வன் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் உடனடியாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.