நெஞ்சை உலுக்கிய காட்சி! பணகுடி பைபாஸில் வாகனம் மோதி உயிருக்கு போராடிய பசு: கண்ணீர் விட்ட மாடுகள்!
திருநெல்வேலி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பணகுடி புறவழிச்சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பசுமாடு ஒன்று உயிருக்குப் போராடியதும், அதனைப் பிரிய மனமின்றி மற்ற மாடுகள் சுற்றி நின்ற காட்சியும் காண்போரை கண் கலங்க வைத்தது.
திருநெல்வேலி - நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் பணகுடி பைபாஸ் பகுதி எப்போதும் வாகனப் போக்குவரத்து மிகுந்த இடமாகும். இன்று இப்பகுதியில் சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று சாலையைக் கடக்க முயன்றது. அப்போது. அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் அந்தப் பசுவின் மீது பயங்கரமாக மோதியது.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது.பலத்த காயமடைந்த அந்தப் பசு, சாலையிலேயே சுருண்டு விழுந்து உயிருக்குப் போராடியது. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடனடியாக ஓடிச் சென்று, பசுவை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர்.
இதற்கிடையில், விபத்துக்குள்ளான பசுவுடன் வந்த மற்ற மாடுகள், வலியால் துடித்த பசுவை விட்டுச் செல்ல மனமின்றி, அதனைச் சுற்றியே பரிதாபமாக நின்றன. வாயில்லா ஜீவன்களின் இந்த பாசப் பிணைப்பைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால், கால்நடை உரிமையாளர்கள் தங்கள் மாடுகளைச் சாலைகளில் திரிய விடாமல் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளையில், ஒரு உயிரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு, மனிதாபிமானமின்றிச் சென்ற அந்த வாகன ஓட்டுநரின் செயல் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.