வீட்டின் முன் விளையாடிய 4 வயது சிறுமியை கடித்துக் குதறிய தெருநாய்! அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து மீட்ட பொதுமக்கள்!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே, வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியைத் தெருநாய் ஒன்று கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள மேலப் பிள்ளையார் குளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவருடைய மகள் 4 வயதான ஐஸ்வர்யா. நேற்று  மாலை சிறுமி ஐஸ்வர்யா தனது வீட்டின் வாசலில்விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது ,  அங்கு வந்த வெறிநாய் ஒன்று, திடீரென சிறுமி ஐஸ்வர்யாவின் மீது பாய்ந்தது. சற்றும் எதிர்பாராத நிலையில், அந்த நாய் சிறுமியை பலமாக கடித்துக் குதறத் தொடங்கியது. வலியால் துடித்த சிறுமி ஐஸ்வர்யா பயத்தில் அலறித் துடித்தார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர். அங்கு நாய் சிறுமியை கடித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக அந்த நாயை அடித்து விரட்டினர். பின்னர் படுகாயமடைந்த சிறுமியை மீட்டனர்.

ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி ஐஸ்வர்யாவை, உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமி அனுமதிக்கப்பட்டு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் முன் விளையாடிய சிறுமியை நாய் கடித்த சம்பவம் அப்பகுதி பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

More News >>