நெல்லை தீயணைப்புத்துறை அதிகாரி அலுவலகத்தில் பணம் வைத்த கூலிப்படைத் தலைவன் மும்பையில் கைது
நெல்லையில் தீயணைப்பு துறை துணை இயக்குனரை சிக்க வைக்க அலுவலகத்தில் பணம் வைத்த கூலிப்படை தலைவன் மேலப்பாளையத்தைச் சேர்ந்த விஜய் (30) மும்பை தாராவியில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகம் என்.ஜி.ஓ.காலனியில் உள்ளது. தற்போது, துணை இயக்குனராக சரவண பாபு உள்ளார். கடந்த 18ம் தேதி அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தில் அவரது அறையில் அலமாரியில் பைல்களுக்கு இடையே வைக்கப்பட்ட 6 கவர்களில் 2 லட்சத்து24 ஆயிரத்து நூறு ரூபாய் பணம் இருந்ததாக போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவரிடம் 27,400 இருந்ததாக கூறி பறிமுதல் செய்தனர்.
சரவணபாபு நேர்மையான அதிகாரியாக அறியப்பட்டவர். அவர் மீது யாரோ உள்நோக்கத்தில் பணத்தை வைத்து சிக்க வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, என்.ஜி.ஓ., காலனி தீயணைப்பு துணை இயக்குனர் அலுவலகத்திற்கு அருகில் எதிர்புறம் உள்ள ஒரு வீட்டின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், சோதனை நடந்ததற்கு முன்றைய தினம், அதாவது நவம்பர் 17ம் தேதி இரவு 12:10 மணிக்கு காக்கி பேண்ட், நீல நிற சட்டை அணிந்த ஒரு நபர் டூவீலரில் தீயணைப்பு அலுவலகம் முன்பாக வருகிறார். டூவீலரை நிறுத்திவிட்டு ஒரு பையை எடுக்கிறார். அதிலிருந்து , சில கவர்கள் கீழே விழுகின்றன. பின்னர், அந்த நபர் அந்த பையுடன் அலுவலகத்திற்குள் சென்று வைத்துவிட்டு 10 நிமிடங்களில் மீண்டும் வெளியேறுகிறார்.
இந்த வீடியோ வெளியான நிலையில், நெல்லை தீயணைப்பு துறை துணை இயக்குனரை சிக்க வைக்க அலுவலகத்தில் பணம் வைத்த கூலிப்படை தலைவன் மேலப்பாளையத்தைச் சேர்ந்த விஜய் (30) மும்பை தாராவியில் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, விசாரணைக்காக பெருமாள் புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர் மாநகர துணை ஆணையாளர் வினோத் சாந்தாராம் தலைமையிலான தனிப்படையினர் இத்தகைய அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் தீயணைப்புத்துறையை சேர்ந்த பலர் சிக்குவார்கள் எனதெரிகிறது.