மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி : உயிர்காக்கும் உன்னத பணியில் நெல்லை நந்தினி

சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தடுக்கும் பொருட்டு, திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நந்தினி, மாணவர்களுக்கு நீச்சல் மற்றும் நீர்நிலைகளில் பாதுகாப்பாக குளிப்பது குறித்து விழிப்புணர்வுப் பயிற்சிவழங்கி வருகிறார்.

இது குறித்து நந்தினி கூறுகையில், "கடந்த 20 ஆண்டுகளில் மக்கள் வாழ்வாதாரத்திற்காக நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். அதற்கு முன்பு வரை மக்கள் கிராமப்புறங்களில் நீர்நிலைகளுடன் ஒன்றி வாழ்ந்தனர். இதனால், நீச்சல் கற்றுக் கொண்டனர்.இப்போதுள்ள குழந்தைகளுக்கு ஆறுகள் மற்றும் குளங்களின் ஆழம் மற்றும் சுழல்கள் குறித்த புரிதல் இல்லை. இதன் விளைவாகவே விடுமுறை நாட்களில் நீர்நிலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.

விடுமுறை நாட்களில் குழந்தைகளை ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்வதை விட, உங்கள் சொந்தக் கிராமங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்குள்ள வயல்வெளிகளில் நடக்கக் கற்றுக்கொடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமை. சிலம்பம், கராத்தே போன்ற கலைகள் மற்றவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் தற்காப்புக் கலைகள். ஆனால், நீச்சல் என்பது விபத்து காலங்களில் நம் உயிரையே காப்பாற்றும் 'உயிர் காக்கும் கலை. இதனை மாணவர்கள் அவசியம் நீச்சல் கற்க வேண்டும்'' என்றார் .

தனது விழிப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் தனது சுற்றுவட்டாரக் கிராமக் குழந்தைகளுக்கு நந்தினி சிறப்பு நீச்சல் பயிற்சியை வழங்கினார். ஆறு, குளம், கால்வாய் மற்றும் கிணறுகளில் குளிக்கும்போது எவ்வளவு கவனமுடன் இருக்க வேண்டும் என்பது குறித்தும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நீச்சல் நுணுக்கங்கள் குறித்தும் அவர் நேரடிப் பயிற்சியளித்தார்.

இந்த முயற்சி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் இது போன்ற விழிப்புணர்வுப் பயிற்சி வழங்கப்பட்டால் மட்டுமே, எதிர்காலத்தில் நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை முழுமையாகத் தடுக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

More News >>