சீரழிவை ஏற்படுத்தும் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படம் ‘ஏ’ சான்றிதழ் பெற்றது. இந்த படத்தில், நேரடி ஆபாச வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த திரைப்படம் ஏற்படுத்தி வரும் பண்பாட்டு சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படம் ஏற்படுத்தி வரும் பண்பாட்டு சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.மக்களை மிக எளிதில் சென்றடைவதற்கான ஊடகமாக கருதப்படும் திரைப்படங்கள் சமூக சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணிப்பது கண்டிக்கத்தக்கது.திரைப்படங்கள் மிகவும் சிறப்பான கலை வடிவம் பெற்றது. அதை சமுதாயத்தைக் கெடுக்கும் களையாக மாற்றிவிடக்கூடாது. இதுபோன்ற திரைப்படங்களை  தணிக்கைச் சான்று வாரியம் எவ்வாறு அனுமதிக்கிறது? பெண்மையை இழிவுபடுத்தும் இத்தகைய படங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த மகளிர் அமைப்புகள் முன்வராதது ஏன்? ஆகியவை தான் விடை தெரியாத வினாக்களாக இருக்கிறது.மது, புகை மற்றும் பிற போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளை விட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற திரைப்படம் ஏற்படுத்திவிடும். இத்தகைய அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களை பார்ப்பதிலிருந்து இளைஞர்களும், மாணவர்களும், தமிழ் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்’. என்று ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>