பெண்ணுடன் தொடர்பு : சீவலப்பேரியில் சடலமாக கிடந்த முதலூர் கார் தரகர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூர் கிராமத்தை சேர்ந்தவர் மார்ட்டின் ஸ்டாலின் (வயது 40). கேபிள் டிவி ஆபரேட்டர் தொழில் செய்து வரும், மார்ட்டின் கார்கள் வாங்கி விற்கும் புரோக்கர் தொழிலும் செய்து வந்துள்ளார். இவர் நேற்று அதிகாலை பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள தோணித்துறை கிராமத்தின் சுடுகாட்டு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில். மார்ட்டினுக்கு முதலூர் பகுதியில் வசிக்கும் பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. அந்த பழக்கத்தை கைவிடுமாறு அந்த பெண்ணின் சகோதரர் மார்ட்டினிடம் கூறியுள்ளார். ஆனால், மார்ட்டின் தொடர்ந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் , அந்த பெண்ணின் சகோதரர் கூலிப்படையை ஏவி மார்ட்டினை நாங்குநேரி பகுதியில் வைத்து கொலை செய்து தோணித்துறை சுடுகாட்டில் உடலை வீசி சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலிப்படையின் தலைவனாக செயல்பட்ட பாளையங்கோட்டை சேர்ந்தவர் மற்றும் கூலிப்படையை ஏவிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் பிடிபட்ட பின்னரே, உண்மை தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

More News >>