30 ஆண்டுகால உழைப்பு, நீதிமன்ற உத்தரவிட்டும் கிடைக்காத பணிக்கொடை: ஓய்வு பெற்ற அரசு டிரைவரின் கண்ணீர் போராட்டம்
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 30 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணியாற்றி, தனது வாழ்நாளை மக்கள் சேவைக்காக அர்ப்பணித்த ஒரு தொழிலாளி, இன்று தனது சொந்த உழைப்பிற்கான பணத்தைப் பெற முடியாமல் அதிகாரிகளிடம் கையேந்தி நிற்கும் அவல நிலை திருநெல்வேலியில் நடந்துள்ளது.
திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (திருநெல்வேலி) 30 ஆண்டுகள் ஓட்டுநராகப் பணியாற்றி 2019-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்று ஆறு ஆண்டுகள் கடந்த பின்னரும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கொடை (Gratuity) மற்றும் இதர நிலுவைத் தொகைகள் முழுமையாக வழங்கப்படவில்லை.
பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனில்லாததால், ஆறுமுகம் நீதிமன்றத்தை நாடினார். கடந்த 2025 ம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி தொழிலாளர் துணை ஆணையர் வழங்கிய உத்தரவின்படி (வழக்கு எண்: PG 217/23), அவருக்கு நிலுவையில் உள்ள ரூ. 3,64,230 பணத்தை 10% வட்டியுடன் 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து 4 மாதங்களாகியும் போக்குவரத்துக் கழகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து ஆறுமுகம் கூறுகையில், "நிர்வாக இயக்குநரையும் இதர அதிகாரிகளையும் பலமுறை நேரில் சந்தித்துப் பேசிவிட்டேன். ஆனால் எனது மனு எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என அலட்சியமாகப் பதிலளிக்கின்றனர்.இது தனிப்பட்ட ஒருவரின் பிரச்சனை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் சுமார் 13,000 போக்குவரத்துத் தொழிலாளர்கள் இதே போன்ற சூழலில் தவிக்கின்றனர். ஒரு தொழிலாளி தனது பணத்தைப் பெறுவதற்கு முன்பே இறந்துவிட்டால், அந்தப் பணம் மீண்டும் அரசாங்கத்திற்கே சென்றுவிடுகிறது. இது எங்கள் உழைப்பைச் சுரண்டும் செயல்" என ஆதங்கப்பட்டார்.
அதிகாரிகளின் இந்தத் தொடர் அலட்சியத்தால் விரக்தியடைந்த ஆறுமுகம், தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவும், நீதிமன்றம் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சொத்துக்களை 'ஜப்தி' செய்து தனது நிலுவைத் தொகையைப் பெறவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகளைத் தனது வழக்கறிஞர் மூலம் அவர் முடுக்கிவிட்டுள்ளார்.