அங்கீகாரம் இல்லாமல் ரயில் டிக்கெட் எடுத்துத் தருகிறீர்களா? கம்பி எண்ண வைக்கும் ரயில்வே சட்டம்!
ரயில் டிக்கெட்டுகளை அங்கீகாரம் இன்றி எடுத்துத் தருவதும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும் கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என்பதை விளக்கும் வகையில், நெல்லையில் ஒருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை சங்கர் நகர், நாரணம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த காசிநாதன் மகன் மாரியப்பன் (37). இவர் முறையான அங்கீகாரமின்றி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொடுத்து வந்துள்ளார். இது குறித்துத் தகவலறிந்த நெல்லை ரயில்வே பாதுகாப்பு படை (RPF) துணை ஆய்வாளர், மாரியப்பன் மீது வழக்குப்பதிவு செய்து (Cr.No. 894/2025) அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்.
ரயில்வே சட்டம் பிரிவு 143(1)(a) கூறுவது என்ன?
இந்த வழக்கின் மிக முக்கியமான அம்சம் அது கையாளப்பட்ட சட்டப்பிரிவுதான். ரயில்வே சட்டம் 1989, பிரிவு 143-ன் படி:* ரயில்வே நிர்வாகத்தால் முறையாக அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபரும், ரயில் டிக்கெட்டுகளை வாங்குவதையோ அல்லது பயணிகளுக்கு டிக்கெட் எடுத்துத் தருவதையோ தொழிலாகச் செய்யக்கூடாது.* தனிநபர் ஐடி-யைப் பயன்படுத்தி (Personal User ID) மற்றவர்களுக்குக் கட்டணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் எடுத்துத் தருவதும் இந்தச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.* இச்சட்டத்தின் கீழ் பிடிபட்டால் அபராதம் மட்டுமின்றி சிறைத் தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளது.
நீதிமன்ற விசாரணை மற்றும் தீர்ப்பு
இந்த வழக்கு நெல்லை 4-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பி. சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மாரியப்பன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். "குடும்பப் பொருளாதார நெருக்கடி காரணமாகத் தெரியாமல் இந்தப் பணியைச் செய்தேன்; இனி இது போன்ற தவறுகளில் ஈடுபட மாட்டேன்" என அவர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.
அவரது வாக்குமூலத்தைக் கருத்தில் கொண்ட நீதிபதி, மாரியப்பனுக்கு ரூ.2,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். ஒருவேளை அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், ஒரு வாரம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் ரயில்வே கவுன்ட்டர்கள் அல்லது IRCTC இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களை மட்டுமே அணுக வேண்டும். அங்கீகாரம் இல்லாத நபர்களிடம் டிக்கெட் வாங்குவதும், அதிகப் பணம் கொடுத்து முன்பதிவு செய்வதும் சட்டப்படி சிக்கல்களை உருவாக்கும். "தெரியாமல் செய்தேன்" என்ற காரணம் சட்டத்தின் முன் எடுபடாது.