நெல்லை ஏடிஎம் மையங்களில் நிரப்ப வேண்டிய ரூ.1.32 கோடியை முறைகேடாகச் சுருட்டிய கிளை மேலாளர் கைது!

நெல்லை மாநகரம் தச்சநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏடிஎம் மையங்களுக்குப் பணம் கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டு வரும் சிஎம்எஸ் (CMS) என்ற தனியார் நிறுவனத்தில் செல்வகுமார் (34) கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் கோயம்புத்தூர், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி முதல் கடந்த 3-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பதற்காக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட ரூ.1 கோடியே 32 லட்சத்து 48 ஆயிரத்தை அவர் முறையாக ஏடிஎம்களில் நிரப்பாமல் கையாடல் செய்ததாகவும், அது தொடர்பாக அந்நிறுவனத்தின் தமிழ்நாடு -கேரள மாநில மண்டல மேலாளர் ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், தச்சநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையின் போது, அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், செல்வகுமார் தனது மடிக்கணினியைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றக் கணக்குகளில் தகிடுதத்தம் செய்வதும், திட்டமிட்டுப் பணத்தை அபகரிப்பதும் உறுதி செய்யப்பட்டது.மேலும் விடுமுறை நாட்களில் பணிக்கு வந்த செல்வகுமார் காவலாளியை மிரட்டி சாவியைப் பெற்றுக் கொண்டு அலுவலகத்திற்குள் சென்றதும், பணத்தை முறைகேடு செய்ததும் அம்பலமானது.

இதனையடுத்து, தச்சநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரகுமார் தலைமையிலான போலீசார் செல்வகுமார் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் 314, 316(5) மற்றும் 238 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 2 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்ப வேண்டிய ஊழியரே கோடிக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடித்த இச்சம்பவம் வங்கித் துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பும் CMS Info Systems நிறுவனத்தில், உயர் அதிகாரிகளே 'உள்வேலை' மூலம் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்யும் சம்பவங்கள் பெங்களூரு முதல் நெல்லை வரை தொடர்கதையாகி வருகின்றன.

நெல்லை தச்சநல்லூர் கிளையில் மண்டல மேலாளர் செல்வகுமார் என்பவர் ரூ.1.32 கோடி பணத்தைக் கையாடல் செய்துவிட்டு, ஆதாரங்களை மறைக்க சிசிடிவி காட்சிகளை அழித்ததாகத் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த நவம்பர் மாதம் பெங்களூருவில் இந்த நிறுவனத்தின் கேஷ் வேனில் இருந்து ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இதில் தற்போதைய மேலாளர் மற்றும் முன்னாள் ஊழியர் என நிறுவனத்தோடு தொடர்புடையவர்களே மூளையாகச் செயல்பட்டது விசாரணையில் அம்பலமானது.

வங்கிகளின் கோடிக்கணக்கான பணத்தைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டிய ஒரு நிறுவனத்தில், நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க வேண்டிய அதிகாரிகளே இத்தகைய மெகா மோசடிகளில் ஈடுபடுவது பெரும் பாதுகாப்பு ஓட்டையைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தத் தொடர் 'உள்வேலை' திருட்டுகள் நிதி நிறுவனங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையாளர் டாக்டர் மதன் ஐபிஎஸ் கூறியதாவது, தற்போது ஒன்று புள்ளி இரண்டு கோடி கொள்ளை போன வழக்கில் நிறுவனத்தின் ஊழியர் மண்டல மேலாளர் பொறுப்பில் இருந்த செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

More News >>