தமிழக முதல்வர் சொல்ல மறந்த சாதனைப் பட்டியல் - சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது சென்னை- சேலம் எட்டுவழிச்சாலை நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் இதுவரையில் பல ஏக்கர் விவசாய விளைநிலங்கள் தொழிற்சாலை விரிவாக்கம், விமான நிலையம், நகர்புற விரிவாக்கம்/சாலை திட்டங்கள் எனக் கூறி கையகப்படுத்தி உள்ளார். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் ஆண்டு கணக்கில் போராடியும் அதனை கண்டு கொள்ளாமல் வேளாண் விளைநிலங்கள் அரசால் அபகரிப்பு செய்யப்பட்டு உள்ளன. பரந்தூரில் தொடங்கிய இந்த அபகரிப்பு தமிழகம் எங்கும் நீக்கமற நிகழ்ந்து உள்ளன.
பரந்தூர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5746 ஏக்கர் நிலங்கள் அரசால் விமான நிலையம் அமைக்க கையகபடுத்தப்பட்டு வருகிறது. இதில் பெரும்பகுதியில் நிலங்கள் வேளாண் நிலங்கள், ஏரிகள், நீர்நிலைகள், கிராமங்கள் உள்ள போதும் இதுவரை 1000 ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சுற்றுவட்டாரத்தில் 9 கிராமங்களைச் சேர்ந்த 3174 ஏக்கர் வேளாண் நிலங்கள் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்கென கையகபடுத்தப்படுகிறது.எதிர்ப்பு தெரிவித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் சாயப் பட்டறை கழிவுநீர் நிலத்தடியில் செலுத்தப்படுவதால் அப்பகுதியில் புற்றுநோயால் மக்கள் பாதிக்கப்படும் நிலையில் சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் 184 ஏக்கர் நிலங்கள் ஜவுளி பூங்காவிற்காக கையகபடுத்தபட்டு உள்ளது. இங்கு அமைய உள்ள 60க்கும் மேற்பட்ட சாயபட்டறைகளால் சுற்றுசூழல் பாதிக்கபடும் என்பதால் இத்திட்டத்திற்கு இங்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலே 1360 ஏக்கர்,
இதேபோல் அன்னூர், மேட்டுபாளையம் பகுதியில் 3731 ஏக்கர் விளைநிலங்கள், நாமக்கல் மாவட்டம் வளையபட்டி பகுதியில் 882 ஏக்கர், கிருஷ்ணகிரியில் உத்தனப் பள்ளி பகுதியில் 3034 ஏக்கர், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் 2700 ஏக்கர், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே 1000 ஏக்கர், தர்மபுரியில் 1733 ஏக்கர் என சொல்லிக்கொண்டே போகலாம். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மண்சார்ந்த மக்கள் நலன், விவசாய உற்பத்தி, மக்களின் வாழ்வாதார பாதிப்புக்கு உள்ளாவது, நீர்நிலைகளை நிர்மூலம் ஆக்குவதை, வேளாண் நிலங்களை அபகரிப்பதை எந்த வகையிலும் ஏற்க இயலாது.
இத்தகைய வேளாண் விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகளை கார்பரேட் நிறுவனங்களிடம் எளிதில் ஒப்படைத்திடும் வகையில் தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தினை 2023 ல் இயற்றியது. இயற்கை வள அழிப்பு, விவசாய நிலங்கள் அபகரிப்பு, சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகள் அதிகரிப்பு/ நீர் ஆதாரங்கள் அழிவு, நிலவளம் பாதிப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் தகர்ப்பு ஆகியவற்றை தமிழக முதல்வர் தனது ஆட்சிக்காலத்தில் சத்தமின்றி சாதித்து காட்டி உள்ளார்.
எனவே நிறைவேற்ற மறந்த வாக்குறுதிகளைப் போல இதனையும் கருதி விடகூடாது என்பதற்காக ஞாபகபடுத்துகின்றோம்.. என்று அந்த அறிக்கையில் கூறப்படுள்ளது.