நெல்லையில் பொங்கல் விழா : கரகாட்டத்தில் கனகாவை மிஞ்சிய எம்.பி.பி.எஸ் மாணவி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 'சமத்துவ பொங்கல்' திருவிழா மிகுந்த உற்சாகத்துடனும், கலைநிகழ்ச்சிகளுடனும் கோலாகலமாக நடைபெற்றது.திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, கல்லூரி முதல்வர் (டீன்) டாக்டர் ரேவதி பாலன் தலைமை தாங்கினார். விழாவைத் தொடங்கி வைத்த அவர், மாணவ-மாணவிகளுடன் இணைந்து பொங்கலிட்டு பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
எப்போதும் படிப்பு, தேர்வு, மருத்துவச் சேவை எனப் பரபரப்பாகக் காணப்படும் மருத்துவ மாணவ-மாணவிகள், இன்று தங்களது வெள்ளை அங்கியை விடுத்து பாரம்பரிய உடைகளில் ஜொலித்தனர். விழாவின் முக்கிய அங்கமாக தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகியவை நடைபெற்றன. மாணவர்களின் தாளத்திற்கு ஏற்ப ஆடிய ஆட்டமும், பாடிய பாட்டும் மருத்துவமனை வளாகத்தையே விழாக்கோலம் பூணச் செய்தது. தாரை தப்பட்டை முழங்க, மாணவர்கள் உற்சாகமாக நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மதம், இனம், மொழி கடந்து அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த 'சமத்துவ பொங்கல்' கொண்டாடப்பட்டது. புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம் இட்டு "பொங்கலோ பொங்கல்" என மாணவர்கள் இட்ட முழக்கம் விண்ணைத் தொட்டது. பாரம்பரிய முறைப்படி கரும்பு, மஞ்சள் குலைகள் கட்டி பொங்கல் பானையைச் சுற்றி நின்று மாணவர்கள் கொண்டாடினர் விழாவில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
"மருத்துவப் படிப்பின் அழுத்தங்களுக்கு மத்தியில், இது போன்ற கலாச்சார விழாக்கள் எங்களுக்குப் புத்துணர்ச்சியைத் தருகின்றன. நமது பாரம்பரியக் கலைகளைக் கற்றுக்கொண்டு ஆடுவது பெருமையாக இருக்கிறது" என மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.