பணகுடியில் த.வெ.க , பாரதிய ஜனதா கட்சி பேனர்களை கிழித்து எறிந்து திமுகவினர் அடாவடி
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பணகுடியில் ராமலிங்கசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாஷேகத்தை முன்னிட்டு கடந்த 22ம் தேதி தெப்பக்குளம் அருகே பாரதிய ஜனதா கட்சி தரப்பில் 3பேனர்களும் த.வெ. க சார்பிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்களை பணகுடி திமுகவினர் அடாவடியாக அகற்றி விட்டு, தங்களது பேனர்களை வைத்துள்ளனர். இதனால், பாஜக மற்றும் த.வெ.க கட்சி தொண்டர்கள் ஆவேசமடைந்தனர். தவெக கட்சியின் நெல்லை மாவட்ட மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர். கிறிஸ்டோபர் தலைமையில் தவெக கட்சியினர் முற்றுகையில் ஈடுபட்டனர். கோவில் விழாவில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர் சுகுமாரிடத்திலும் முறையிட்டனர்.
இதற்கிடையே, திமுகவினர் வைத்த பேனர்களை பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் கிழித்து எறிந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, பணகுடி காவல்துறையினர், பேனர்களை கிழித்ததாக கூறி பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களை கைது செய்தனர். அப்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் தங்கள் கட்சி பேனர்களை கிழித்த திமுக தொண்டர்களையும் கைது செய்ய வேண்டுமென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் , அனைத்து கட்சி பேனர்களையும் அகற்ற வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர். இதனால், பணகுடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.