ஒண்டிப்புதூரில் சேப்பாக்கத்துக்கு தம்பி! கோவையில் இனி என்டர்டெயின்ட்மென்டுக்கு பஞ்சமே இல்லை!

இந்தியாவில் பல மாநிலங்களில் 2,3 கிரிக்கெட் ஸ்டேடியங்கள் இருக்கின்றன.மகாராஸ்டிரத்தில் மும்பை, புனே, நாக்பூர், அவுரங்கபாத் என பல நகரங்களில் சர்வதேச மைதானங்கள் உள்ளன. பிரிக்கப்படாத ஆந்திராவில் விஜயவாடா, விசாகப்பட்டினம், ஹைதராபாத் ஆகிய 3 நகரங்களில் சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. கேரளாவில் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் நகரங்களில் இரு கிரிக்கெட் ஸ்டேடியங்கள் அமைந்துள்ளன.

ஆனால், வளர்ந்த மற்றும் பெரிய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னை சேப்பாக்கத்தில் மட்டுமே ஒரே ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் மட்டுமே உள்ளது. சேப்பாக்கம் ஸ்டேடியம் இந்தியாவின் பழமையான 2வது மைதானம் ஆகும். இதனால், தமிழகத்தில் சென்னையை தாண்டி மற்றொரு நகரத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில்தான் இந்த மைதானம் அமைக்கப்படவுள்ளது.

கோவையில் 20.18 ஏக்கர் பரப்பளவில் 10 ஏக்கரில் வணிக வளாகத்துடன் ஒண்டிபதூர் ஜெயில் ரோடு அருகில் தமிழகத்தின் இரண்டாவது கிரிக்கெட் மைதானம் கட்டப்படவுள்ளது. தனியார் மற்றும் அரசு கூட்டு முயற்சியில் இந்த மைதானம் அமைகிறது.இதற்காக, தனியார் நிறுவனங்களிடத்தில் இருந்து டிட்கோ நிறுவனம் டெண்டர் வரவேற்றுள்ளது. புதிய மைதானம் 30 ஆயிரம் இருக்கை வசதிகளுடன் அமைகிறது. அரசு நிலத்தில் தனியார் நிறுவனம் மைதானம் அமைத்து 60 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும். பின்னர், அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஐந்து நட்சத்திர வசதிகளுடன் அமையும் இந்த மைதானத்தில் கிரிக்கெட் மியூசியம் உள்பட சகல வசதிகளும் நவீன முறையில் அமையப் போகிறது. கோவையில் கிரிக்கெட் மைதானம் அமையும் பட்சத்தில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் வருகை தருவார்கள். சுற்றுலாத்துறையும் மேம்படும். கோவையில் இந்த மைதானம் அமைந்தாலும் அருகிலேயே, கேரள மாநிலம் இருப்பதால், இங்கு போட்டி நடந்தால் இரு மாநிலத்தை சேர்ந்த ரசிகர், ரசிகைகள் குவிவார்கள். இதனால், எண்டர்ட்யின்ட்மென்டுக்கு பஞ்சமே இருக்காது என்று தாராளமாக நம்பலாம்.

More News >>