ஆபாசமாக ஆட சொல்லுவாங்க, இல்லனா வாய்ப்பு தரமாட்டாங்க!- சீன அதிபர் ரசித்த கரகாட்ட கலைஞர் கோவையில் பேட்டி
கோவை மாநகராட்சி சார்பில் உலக மகளித் தின விழா செம்மொழி பூங்காவில் நடைபெற்றது. விழாவுக்கு கோவை எம்.பி . கணபதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். கலெக்டர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, போலீஸ் கமிஷனர் கண்ணன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சாதனை படைத்த 11 பெண்களுக்கு விருதுகள் மேடையில் விருதுகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கரகாட்ட கலைஞர் துர்காதேவியின் கரகாட்டம் முத்தாய்ப்பாக அமைந்தது. கடந்த 2019ம் ஆண்டு சீன அதிபர் ஸீ ஜின்பிங் சென்னை வந்திருந்தார். அப்போது, மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து ஜின்பிங் , துர்காதேவியின் கரகாட்டத்தைக் கண்டு ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரிடத்தில் பேசினோம் '' எனக்கு சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி . பிராமின் குடும்பம்தான்.இதனால், 7 வயதிலேயே பரதம் கற்றுக் கொண்டேன். பின்னர், பரதநாட்டிய நிகழ்ச்சிளுக்காக கோயில்களுக்கு செல்லத் தொடங்கினேன். அப்போது, அங்கே நிகழ்ச்சி நடத்த கரகாட்டக் கலைஞர்களும் வருவார்கள். அவர்கள் ஆடுவதை கண்டு ரசிப்பேன். ஒரு முறை அவர்களிடத்தில் இருந்து கேட்டு வாங்கி கரகத்தை தலையில் வைத்து அழகு பார்த்தேன். இப்படிதான் , கரகம் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. பிராமின் குடும்பம் என்பதால், கரகம் பழகக் கூடாது என்று வீட்டில் ஒரே எதிர்ப்பு. ஆனால், நான் விடாப்பிடியாக நின்றேன.
10 வயதில் இருந்து கரகத்தைக் கற்றேன். சும்மா, கரகத்தை தலையில் வைத்து ஆடினால், மக்கள் ரசிக்க மாட்டார்கள். அதனால், போரடிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அதில் புதிய யுத்திகளை புகுத்தினேன். பாட்டில் மீது நின்று ஆடுவது, தீப்பந்தத்தை தலையில் வைத்து ஆடுவது என்று புதுமைகளை புகுத்தினேன். தற்போது, 20 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரை என்னோல நிகழ்சிகளை நடத்த முடியும். காசி தமிழ்ச்சங்கத்தில் என்னோட நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேரில் ரசித்தார். பின்னர், எனக்கு உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருதும் வழங்கப்பட்டது. இந்த சமயத்தில் தனது' மான் கி பாத்' நிகழ்ச்சியில் என்னை குறிப்பிட்டு மோடி பாராட்டியது எனக்கு மிகுந்த ஊக்கமளித்தது.
எனக்கு ஒரு நிகழ்ச்சிக்கு போனா 10 ஆயிரம் தருவாங்க. கோயில் விழாக்கள் சீசன் காலத்தில் மாதம் 10 நிகழ்ச்சிகள் இருக்கும்.எங்களுக்கு ஆட மேடை கிடைப்பதுதான் முக்கியம். சீசன் இல்லாத காலத்தில் குழந்தைகளுக்கு கரகம் சொல்லி கொடுப்பேன். எங்களுக்கான ஆடைகளை நாங்கேளே வடிவமைத்துக் கொள்வோம். அதற்கு, டெயிலரிங் அகாடமியும் நடத்துறோம். அதன் மூலமும் கொஞ்சம் வருவாய் வருது. கரகாட்டம் மட்டும் அல்ல ராஜாராணி ஆட்டம், பெரியகால் ஆட்டம், சிலம்பமும் எனக்கு தெரியும். இதையெல்லாம், நமது அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு எடுத்துட்டு போகனும். என்னோட பெண்ணு பெயரு மாலினி. அவங்க ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சுட்டு, கரகம் ஆடுறாங்க. பையன் கோவைல ஏ.ஐ படிக்குறான்.
பரதக்கலைஞர்கள் எப்படி மரியாதையாக நடத்துகிறார்களோ.... அதே போலவே, கரகக் கலைஞர்களும் மரியாதையாக நடத்தப்பட வேண்டும். பல கிராமங்களில் ஆபாசமாக ஆட சொல்லுவாங்க. நான் மறுத்துடுவேன். உடனே, எனக்கு வாய்ப்பு தர மாட்டாங்க. அப்படி, வாய்ப்பு இல்லாத காலமும் இருந்தது உண்டு. ஆனால், இப்போ எனக்கான மரியாதையை நானே உருவாக்கிக்கிட்டேன்.