மக்கள் சேவை கட்சி... அண்ணாமலையின் புது ரூட்

நடிகர் ரஜினி ஆதரவுடன், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, வரும் 15ம் தேதிக்குள் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெருந்துறை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை இருந்த போது, அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க.,வின் ஊழல்களை பட்டியலிட்டு, தீவிர எதிர்ப்பை காட்டினார்.'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் சென்று, பா.ஜ.,வின் கட்டமைப்பையும் பலப்படுத்தினார்; தி.மு.க.,வுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இதனால், அவருக்கென தனி ஆதரவாளர்களும் உருவாகினர்.

மாநில தலைவர் பதவியில் இருந்து, அண்ணாமலை நீக்கப்பட்ட பிறகு, பா.ஜ., தரப்பில் அவருக்கு புதிய பதவி எதுவும் வழங்கப்படவில்லை. அவரது ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், அதிருப்தியில் இருந்த அண்ணாமலை, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., படுதோல்வி அடைந்துள்ளதால், தனிக்கட்சி தொடங்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அன்னாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதால்தான் பாஜகவின் வாக்குவங்கி குறைந்து போனதாக அவரது ஆதரவாளர்கள் பேசி வந்தனர். தற்போது, அவரது ஆதரவாளர்களும், சமூக வலைதளங்களில், அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

புதிய கட்சி தொடங்க உள்ள அண்ணாமலை, தனக்கு நடிகர் ரஜினியின் ஆதரவு கிடைக்கும் என்றும் நம்புகிறார். அவர் அமெரிக்காவுக்கு செல்லும் முன், ரஜினியை சந்தித்து பேசியுள்ளார்.

ரஜினி, அண்ணாமலை ஆகியோர் கைகோர்த்திருப்பது போல, சமூக வலைதளங்களில் அண்ணாமலை ஆதரவாளர்கள் படங்களை பகிர்ந்து வருகின்றனர். 'தலைவனும், தளபதியும் இணையும் போது, இந்தியாவே மாறும். வாழ்க இந்திய ஒற்றுமை' என்ற வாசகங்களை பகிர்ந்து வருகின்றனர். தூய சக்தி தீய சக்தி எல்லாம் வேண்டுவது மக்கள் சக்தியே என்றும் மீம்களை வெளியிட்டு வருகின்றனர்.

வரும், 4ம் தேதி அண்ணாமலையின் பிறந்த நாள். எனவே, குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். வரும் 7ம் தேதி தன் ஆதரவாளர்களை சந்திப்பதாகக் கூறியுள்ளார். வரும் 15ம் தேதிக்குள் புது கட்சியை தொடங்குவார். மக்கள் சேவை கட்சி உட்பட சில பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து, அண்ணாமலை அறிவிப்பார்.

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளில், இன்னும் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அத்தேர்தலில், பெருந்துறை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடவும் வாய்ப்புள்ளது என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, கோவையில், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.கடந்த மாதம் பா.ஜ., அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பெயர் ஏதும் குறிப்பிடாமல், 'பியர்லெஸ் மைன்ட்ஸ் ஹேவ் நோ லிமிட்ஸ்' என ஆங்கிலத்தில், வாசகங்களை குறிப்பிட்டு, போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

பின்னர், கோவையில் பா.ஜ., மையக்குழு கூட்டம் பா.ஜ.,தேசிய அமைப்பு பொதுசெயலர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் சமீபத்தில் நடந்தது. அப்போதும், 'ஆர்மி ஆப் தீரன் அண்ணாமலை' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று 'தலைவா தரணி ஆளவா' என்ற பெயரில், அவரது ஆதரவாளரும், முன்னாள் பா.ஜ., மாநகர் மாவட்ட தலைவருமான பாலாஜி உத்தமராமசாமி பெயரில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து, பாலாஜி உத்தமராமசாமி கூறுகையில், ''ஜூன் 4ல் அண்ணாமலைக்கு பிறந்தநாள். அதற்காக, இந்த போஸ்டர்களை ஒட்டியிருக்கிறேன். அவர், கட்சி துவங்குவது பற்றி, எனக்கு எதுவும் தெரியாது,'' என்றார்.

இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினை நாளை அண்ணாமலை சந்திக்கவுள்ளதாக தெரிகிறது . அப்போது, கட்சியில் அவருக்கு முக்கிய பதவிகள் கொடுப்பது பற்றி விவாதிக்கப்படும் என தெரிகிறது. எனினும், அண்ணாமலை முக்கிய முடிவு எடுத்து விட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

More News >>