நாங்குநேரி :தகாத உறவை கைவிட மறுத்த இளம் பெண் பெற்றோரால் கொலை
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி வைரம்மாள். இந்த தம்பதிக்கு 5 மகள்கள் உள்ளனர். இவரது 5வது மகள் அமுதா.
திருமணமாகாத நிலையில் அமுதா தன் பெற்றோருடன் வசித்தார். இந்த நிலையில், அவரது உறவினர் ஒருவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார். நாளடைவில் அந்த உறவினருக்கும் அமுதாவிற்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
அந்த உறவினருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இதனால், விஷயம் தெரிய வந்ததும், அமுதாவின் பெற்றோர் உறவைக் கைவிடும்படி அமுதாவைக் கண்டித்துள்ளனர். ஆனால், அமுதா அவருடனான பழக்கத்தைக் கைவிட மறுத்துள்ளாராம்.
இதுதொடர்பாக அமுதாவிற்கும் அவரது பெற்றோருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று அமுதா தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்கள் ஊர்க்காரர்களிடம் கூறியுள்ளனர். மூலக்கரைப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு அமுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வில், அமுதாவின் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்ததால் , அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது.
அமுதாவின் தாய், தந்தையிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பலமுறை கூறியும், அமுதா தகாத உறவைக் கைவிட மறுத்ததால் அவரது வாயில் விஷத்தை ஊற்றிவிட்டு அமுதாவின் கழுத்தை நெரித்தோம். சிறிது நேரத்தில் அமுதா உயிரிழந்ந்தார்.பின்னர் உடலை தூக்கில் தொங்கவிட்டோம் என்று பெற்றோர் கூறினர். தற்போது, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.