போதை பொருளை ஒழிக்க முதல்வர் உறுதி!- கதிர் கல்லூரி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் பேச்சு

போதைப்பொருட்களை ஒழிப்பதில் அரசு உறுதியுடன் செயல்படுகிறது என, தமிழகச் சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜிவ் பேசினார்.

கோவை நீலாம்பூரிலுள்ள கதிர் கல்வி நிறுவனங்களின் சார்பில், போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போதையை மறப்போம்; வாழ்வை தொடங்குவோம் என்ற தலைப்பில் நடந்த நிகழ்வில், 6,000 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில், 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு கதிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கதிர் தலைமை வகித்தார். செயலாளர் லாவண்யா கதிர் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் பேசுகையில், “ தமிழ்நாட்டில் போதை பொருட்களை ஒழிப்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. மாணவர்களிடையே போதை பொருள் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். போதை பொருளை தடுக்கவும், பயன்படுத்துவதை தவிர்க்கவும், இதுபோன்ற நிகழ்வுகளை தமிழ்நாட்டில் உள்ள கல்லுாரிகளிலும் நடத்தப்பட வேண்டும். போதை பொருளை தடுக்க வேண்டும்; மாணவர்களின் வாழ்வு நலம் பெற வேண்டும், என்பதில் தமிழக அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது,” என்றார்.

தமிழகச் சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சர் வி.கே ராஜிவ் கூறுகையில், “ கல்லுாரி மாணவர்களிடையே உள்ள போதை பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முற்றிலும் போதை பொருட்களை ஒழிக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு, சமுதாய நிகழ்வுகளில் பங்கேற்று நல்ல எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும். புதிய கல்வி முறைகளில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேறுங்கள். போதை பொருளை போன்றே சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதிலும், கவனம் செலுத்துங்கள்,” என்றார்.

சூலுார் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், சிங்காநல்லுார் சட்டமன்ற உறுப்பினர் கிரி பிரசாத், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் , கதிர் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.எஸ். மிதிலேஷ், இணை செயலாளர் விது பிரதிக்சா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், சுதந்திரதின கிரிக்கெட் கோப்பைக்கான முதல் ஆட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.

More News >>