சி.பி.ஆர். சிகிச்சை: 20 ஆயிரம் மாணவருக்கு பயிற்சி அளித்து கங்கா மருத்துவமனை ஆசிய சாதனை!

கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு இதயம் நின்று போனால் கொடுக்கப்படும் சிபிஆர் சிகிச்சை முறை குறித்த பயிற்சியை 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கற்று கொடுத்து கோவை கங்கா மருத்துவமனை மற்றும் கங்கா நர்சிங் கல்லூரி சாதனை படைத்துள்ளது.

கடந்த செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினத்தை முன்னிட்டு 'பார்வையாளராக இருந்து உயிர் காப்பவர் வரை' என்கிற தலைப்பில் இந்த பயிற்சி முறை தொடங்கப்பட்டது. அமெரிக்கா ஹார்ட் அசோசியசனுடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் நிபுணர்கள் நேரடியாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். கோவை சுற்றுப்புறங்களிலுள்ள 10 கல்வி நிறுவனங்களில் 15 நாட்களில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் இந்திய நேஷன் ஆஃப் லைஃப்சேவர்ஸ் திட்டத்தின் தலைவரும் மங்களகிரி எய்ம்ஸ் நிறுவனத் தலைவருமான பேராசிரியர் டாக்டர் டி.எஸ். ரவிகுமார், கங்கா மெடிக்கல் சென்டரின் மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர் ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் கங்கா செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெபகுமாரி சுதா ஆகியோர் இந்த பயிற்சி திட்டத்தை செயல்படுத்தினர்.

அந்த வகையில், அதிக அளவில் மாணவர்களுக்கு சிபிஆர் பயிற்சி அளித்ததாக ஆசிய புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா நேற்று கங்கா மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கங்கா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் தலைமை தாங்கினார். பிளாஸ்டிக் சர்ஜெரி துறை தலைவர் டாக்டர் ராஜசபாபதி, முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ராஜசேகரன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், சிறப்பு விருந்தினராகவும், கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, கௌரவ விருந்தினராகவும் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் போது, பயிற்சியில் பங்கேற்ற கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் சான்றிதழ்களை வழங்கினார். பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் கங்கா மருத்துவமனை மற்றும் அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியை பெறுவதன் மூலம் நம் கண் எதிரில் யாருக்காவது கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் , உடனடியாக தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, அவர்களுக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து நின்று போன இதயத் துடிப்பை மீட்டெடுக்க முடியும். மற்றவர்களுக்கும் இந்த பயிற்சியை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>