மும்பை இந்தியன்ஸ் வீழ்ச்சிக்கு ரோகித் காரணமா?- மறுக்கும் டுமினி!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு அதே அணியைச் சேர்ந்த டுமினி ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நாடெங்கிலும் நடந்து வருகிறது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இனி விளையாட உள்ள அனைத்துப் போட்டிகளிலும் வென்றால் மட்டுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழலில் இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இறங்கு முகத்துக்கு முக்கியக் காரணம், அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவின் சொதப்பலான பேட்டிங் தான் என பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவருக்கு ஆதரவாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருவருமான ஜே.பி.டுமினி குரல் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், `ரோகித் ஷர்மா இந்த சீசனில் அந்த அளவுக்கு பேட்டிங்கில் சோபிக்கவில்லைதான்.
ஆனால், அவர் கண்டிப்பாக அணிக்குத் தேவையான சமயத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி பேட்டிங் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஏனென்றால், எப்போதும் பேட்டிங்கில் கலக்குவது என்பதைவிட, அணிக்குத் தேவையான சமயத்தில் கை கொடுப்பதுதான் முக்கியம்.
ரோகித்துக்கு அந்த திறமை இருக்கிறது. எனவே, இம்முறை நடந்து வரும் ஐபிஎல் தொடரில் அவரின் ஆட்டத்தை வைத்து கணக்குப் போடுவது தவறு’ என்று ரோகித்துக்காக நேசக்கரம் நீட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் ஷர்மா ஆகியோர் தலைமை தாங்கும் ஐபிஎல் அணிகள், இம்முறை தொடரந்து தோல்வியைத் தழுவி வருவது குறிப்பிடத்தக்கத் தகவல் ஆகும்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com