பீலே எரிமலைகளின் தெய்வமே எங்கள்மேல் இரக்கமாயிரு-ஹவாய் மக்கள் கதறல்
By SAM ASIR
ஹவாய் தீவில் உள்ள கிலேவியா எரிமலை கடந்த திங்கள்கிழமை வரை தொடர்ந்து குழம்பினை கக்கியிருக்கிறது. எரிமலையின் அருகே உள்ள லெய்லானி எஸ்டேட் பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடரும் நிலநடுக்கம், குமுறி கொட்டும் எரிமலை என்று ஹவாய் மக்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.
நிலங்களில் வெடிப்பு ஏற்பட்டு அதன் வழியாக புகையும், ஒருவித வெளிப்படுகிறது. லெய்லானி எஸ்டேட்டின் கிழக்குப் பகுதியில் இதுபோன்ற அநேக இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. லெய்லானி எஸ்டேட்டில் மட்டும் குறைந்தது 10 இடங்களில் நில வெடிப்பு ஏற்பட்டிருக்கும் என்று கவுண்ட்டி பாதுகாப்பு துறை கூறியுள்ளது. எரிமலை ஒரு முறை 330 அடி உயரத்துக்கு குழம்பினை பீய்ச்சியடித்தது. இது அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட உயரமாகும். எரிமலைக் குழம்பினால் இதுவரை 26 வீடுகள் உட்பட 35-ம் மேற்பட்ட கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
அம்பர் மகுவாகேனே என்ற ஆரம்ப பள்ளி ஆசிரியைக்கு இரு குழந்தைகள் உள்ளனர். லெய்லானி எஸ்டேட்டில் உள்ள இவரது மூன்று படுக்கை அறை வீடு. எரிமலைக் குழம்பினால் மூடப்பட்டு விட்டது. "நம் வீடு அழிந்து விட்டது என்று எப்படி என் குழந்தைகளிடம் கூறுவேன்?" என்று கதறுகிறார் அம்பர் மகுவாகேனே.
”எரிமலை வெடிக்கும் நிகழ்வு, சில நாட்கள், சில வாரங்கள், ஏன் சில மாதங்கள் கூட நீடிக்கலாம். நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்," என்று பஃபலோ பல்கலைக்கழகத்தின் மண்ணியல் துறை இணை பேராசிரியர் டிரேஸி கிரேக் கூறியுள்ளார். இவர் கிலேவியா எரிமலையை குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.
தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தேவாலயங்கள், செஞ்சிலுவை சங்கங்களின் முகாம்களில் தங்கியிருப்போர், எரிமலை வெடிப்பு தொடர்வதை குறித்து கவலையடைந்துள்ளார்கள். கிலேவியா எரிமலைக்குள் குடியிருப்பதாக கூறப்படும் எரிமலை தெய்வமான பீலேயிடம் தங்கள் நிலை குறித்து முறையிடுகின்றனர். சிலர் பீலேவை குளிர்விக்கும் வண்ணம், நில வெடிப்புகளின் அருகே அதிர்ஷ்ட செடி என்னும் டி பிளாண்ட்டின் இலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com