இனி ஸ்பாட் பைன் இல்லை.. அபராதம் வசூலிப்பதில் புதிய முறை அறிமுகம்
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இனி ஸ்பாட் பைனுக்கு பதிலாக புதிய முறையை சாலை போக்குவரத்து போலீசார் அறிமுகம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் நாள்தோறும் சாலை விபத்துகள் நடக்கின்றன. விபத்துகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், சாலை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாகனங்களில் வேகமாக செல்வது, போதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு விதங்களில் போக்குவரத்து வீதிமீறல்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இதற்காக, ஸ்பாட் பைன் முறை கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக அமலில் இருக்கிறது. அதாவது, சாலை விதியை மீறி வரும் வாகன ஓட்டியை அங்கேயே பிடித்து அபராதம் விதிப்பது தான் அது. இதற்காக, வாகன ஓட்டிகளிடம் இருந்து போக்குவரத்து போலீசார் ரொக்கமாக பணம் வசூலித்து வந்தனர்.
இதில், பலர் அபராதத்திற்கு மீறி பணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.இதுபோன்ற முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரொக்கமில்லா அபராதம் வசூலிக்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், போலீசார் ரொக்கமாக அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது.
ஸ்வைப் மிஷின் மூலம் அபராதம் வசூலிக்கும் புதிய முறையை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது, இந்த புதிய முறை குறித்து கூடுதல் கமிஷனர் அருண் கூறியதாவது: ஸ்வைப் மிஷின் மூலம் அபராதம் விதிக்கும் புதிய திட்டத்தின் கீழ் 6 வழிகளில் அபராத தொகையை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிமீறலில ஈடுபடும் வாகன ஓட்டிகள் தாங்கள் வைத்திருக்கும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலமாகவும், பாரத ஸ்டேட் வங்கியின் இணையதள வங்கி பண பரிவர்த்தனை வழியாகவும், 132 தமிழ்நாடு இ&சேவை மையங்கள், அஞ்சல் நிலையம் அல்லது நீதிமன்றத்திலும் அபராதம் செலுத்தலாம்.
பின்னர், இ-செலான் ரசீதை அருகில் உள்ள போக்குவரத்து அதிகாரியிடம சமர்ப்பித்தவுடன் அபராத நடவடிக்கை நிறைவு பெறும். இந்த அபராத தொகையை 48 மணிநேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய முறையினால் இனி போக்குவரத்து வாகன ஓட்டிகளிடம் இருந்து எக்காரணத்தை கொண்டும் ரொக்கமாக பணம் வாங்கக்கூடாது. அவ்வாறு மீறி வாங்கினால் லஞ்சம் பெற்றதாக கருதப்படும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com