கற்கள், நச்சுவாயு, அமில மழை - ஹவாய் தீவுக்குத் தொடரும் தலைவலி
கிலேவியா எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம் இவற்றால் ஹவாய் தீவு பாதிப்படைந்துள்ளது. கடந்த வாரம் லெய்லானி எஸ்டேட் பகுதியிலுள்ள 1,700க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்கும்படி நிர்வாகம் வெளியேற்றியது.
அடுத்த ஒரு மாதத்திற்கு இங்குள்ள மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு 2.9 மில்லியன் டாலருக்கு அதிகமாக செலவாகும் என்று தெரிகிறது. எனவே ஆளுநர் டேவிட் இக்கே, ஹவாய் தீவை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
வரும் வாரங்களில் எரிமலையில் நீராவி பெருவெடிப்பு, எரிமலை புகை மற்றும் அமில மழை ஆகியவற்றை எதிர்பார்க்கலாம் என்று அமெரிக்க மண்ணியல் ஆய்வு துறை எச்சரித்துள்ளது. எரிமலைக்குள் உள்ள குழி போன்ற பகுதியில் இறங்கும் எரிமலைக் குழம்புடன் நிலத்தடி நீர் கலப்பதால் உருவாகும் நீராவியால் பெருவெடிப்பு நிகழக்கூடும் என்றும், இதனால் கூழாங்கல் அளவான சிறிய கற்கள் முதல் பெருங்கற்கள் வரை வெடித்துச் சிதறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. எரிமலை சாம்பல் மிகவும் உயரத்துக்கு வீசியடிக்கப்படுவதும் நிகழலாம்.
எரிமலையிலிருந்து வெளிப்படும் மாசு மற்றும் எரிமலை மற்றும் நிலவெடிப்புகளிலிருந்து வெளிப்படும் வாயு ஆகியவை ஈரப்பதமான காற்றுடன் கலக்கும்போது புகை உண்டாகக்கூடும் என்றும் இதில் கந்தக அமில துளிகள் கலந்திருக்கும் எனவும் அமெரிக்க மண்ணியல் ஆய்வு துறை கூறுகிறது.
காற்றில் கலந்திருக்கும் கந்தக அமில துளிகளால் அமில மழை பெய்யக்கூடும் என்று ஹவாய் பல்கலைக்கழகம் எச்சரிக்கிறது. அமில மழை, தலைவலி மற்றும் சுவாச பிரச்னைகளை உருவாக்கக்கூடும். எரிமலை புகையில் உள்ள நுண்துகள்கள் நுரையீரலை பாதிப்பதினால் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னை வியாதியுள்ளோருக்கு சிரமங்கள் ஏற்படும். அமில மழையின் காரணமாக தாவரங்கள் பாதிப்படைவதுடன், கார் போன்ற வாகனங்கள், தொழிற்சாலை இயந்திரங்கள் துருப்பிடிக்கக்கூடும் என்று ஹவாய் பல்கலைக்கழகம் எச்சரிக்கை செய்தி விடுத்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com