குழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ்அப்-ல் வதந்தி: வாலிபர் கைது
செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே நேற்று குழந்தை கடத்தும் கும்பல் என்று நினைத்து பொது மக்கள் அடித்து தாக்கியதில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 20 பேரை கைது செய்தனர்.இதைதொடர்ந்து, குழந்தை கடத்தல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவர்களுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்திருந்தனர். மேலும், வாட்ஸ் அப், பேஸ்புக்கில் வதந்தி பரப்புவது குறித்து கண்காணிக்கும்படி போலீஸ் சுப்பிரண்டு உத்தரவிட்டார்.
இந்நிலையில், செய்யாறு பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக கூறி வீடியோ காட்சிகளை பரப்பினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
அந்த வீடியோவில், என் பெயர் வீரராகவன் (35). செய்யாறு அருகே உள்ள புரிசை கிராமத்தில் இருந்து பேசுகிறேன். செய்யாறு பக்கத்துல அதிகமா குழந்தைகளை கடத்துறாங்க. இன்று இரவு பாராசூர் என்ற கிராமத்தில் 2 குழந்தைகளை தூக்கிட்டு போய்ட்டாங்க.
ஏழியனூரில் வடமாநில கும்பல் 2 குழந்தைகளை கடத்திட்டாங்க. தாங்கல், உத்தரிமேரூரில் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். அதனால், உங்க குழந்தைகளை நீங்கள் தான் பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும்.
இதேபோல், செய்யாறு பக்கத்துல விநாயகபுரம் என்ற ஊரில் இந்திகாரனுங்க ஐஸ்பெட்டிக்குள் வைத்து குழந்தைகளை தூங்கி சென்றனர். பொது மக்கள் துரத்தியதால் விட்டுட்டு ஓடிடாங்க.
இதுவரை செய்யாறு பகுதியில் மட்டும் 20 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். அனைவரும் உஷாராக இருங்கள். வேலை முக்கியமில்லை. குழந்தைகள் தான் முக்கியம். குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்க. அனைவரும் உஷாராக இருங்கள். முடிந்த வரை இதனை சேர் செய்து எவ்வளவு குழந்தைகளை காப்பாற்ற முடியாமோ காப்பாற்றுங்கள் நன்றி என கூறியபடி வீடியோ பதிவு இருந்தது.
இந்த வீடியோ வேகமாக பரவியதை அடுத்து செய்யாறு மக்கள் மிகவும் பீதியடைந்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, இன்று அதிகாலை 4 மணிக்கு புரிசை கிராமத்தில் இருந்த வீரராகவனை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com