`கொஞ்சம் வெய்ட் பண்ணனும்!- விஜய்யின் பதிலால் நெகிழ்ந்த கேரள ரசிகை
நடிகர் விஜய் குறித்து, அவரின் கேரள ரசிகை எழுதியுள்ள முகநூல் பதிவுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்குப் பிறகு, தமிழக அளவிலும் தமிகத்துக்கு வெளியேயும் மாஸ் ஓபனிங் `தளபதி’ விஜய்க்குதான் கிடைத்தது. விஜய்க்குப் பிறகும் இந்த வாய்ப்பு சில நடிகர்களுக்குக் கிடைத்த போதும் அதை அவர்கள் தக்கவைத்துக் கொள்ளவில்லை.
ஆனால், விஜய் அப்படியில்லை. பல ஆண்டுகளாக `மாஸ் ஓபனிங்’ ரெக்கார்ட்டை கெத்தாக தக்க வைத்து வருபவர். குறிப்பாக, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும், இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் விஜய்யின் மவுசு, படத்துக்குப் படம் உயர்ந்து கொண்டே போகின்றன.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் விஜய் தனது ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது கேரளத்தைச் சேர்ந்த அவரின் வெகுநாள் ரசிகையான சரண்யா விசாக் அவர்களும், விஜய்யுடன் புகைப்படம் எடுக்க வந்திருந்தார். கேரளாவில் இருந்து ஒரு பெண் ரசிகை தன்னைப் பார்க்க வந்திருந்ததால், அவருக்கு விஜய் அதிக அன்பை பொழிந்துள்ளார்.
குறிப்பாக அந்தப் பெண், `உங்களைப் பார்க்க நான் வெகு நாள் காத்திருந்தேன்’ என்றதற்கு, `நமக்கான ட்ரெய்ன் வரணும்னா நாம கொஞ்ச நேரம் ப்ளாட் ஃபார்மல வெய்ட பண்ணித்தான் ஆகணும்’ என்று நகைப்புடன் கூறி சரண்யாவை ஆசுவாசப்படுத்தியுள்ளார்.
மேலும், சரண்யாவின் குடும்பத்துடனும் அன்பாகப் பேசி உபசரித்துள்ளார். இதனால், மனம் உருகிய சரண்யா, தனது முகநூல் பக்கத்தில் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் நடந்த சம்பவங்களை பதிவிட்டுள்ளார்.
இது விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. மேலும், சரண்யாவின் பதிவு இணையத்திலும் வைரலாகி வருகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com