சென்னையில் நாளை 17 இடங்களில் குடும்ப அட்டைகள் குறைதீர்ப்பு முகாம்
தமிழகம் முழுவதும் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வந்த குடும்ப அட்டைக்கு ஸ்மார்ட் கார்டு மூலம் தீர்வு கண்டது தமிழக அரசு. இருப்பினும்,ஸ்மார்ட் கார்டுக்கு தமிழகம் மாறியது முதல் பல்வேறு குளறுபடிகள் தவறுகள் அரங்கேறி வருகிறது.
குடும்பத்தலைவரின் புகைப்படத்திற்கு பதில் நடிகையின் புகைப்படம், வயது, பாலினம் விலாசம் போன்ற பல்வேறு தவறுகளை அவ்வப்போது குறைகளாக நுகர்வோர் குறை தீர்ப்பு மையம் மூலம் சரி செய்து வருகிறது தமிழக அரசு.
இந்நிலையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் (நாளை) 12ந் தேதி சனிக்கிழமை சென்னை முழுவதும் 17 இடங்களில் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாதம்தோறும் இந்த குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருவதாகவும் இந்த மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10 முதல் 1 வரை நடைபெறவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால், நுகர்வோர் தங்கள் குடும்ப அட்டையில் மேற்கொள்ள விரும்பும் மாற்றம், பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம் போன்றவற்றை மேற்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் பொருட்கள் வழங்கும் கடைகளின் செயல்பாடுகள், நுகர்வோர் சேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க ஒரு சரியான இடமாகவும் இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com