நடப்பது போலீஸ் ராஜ்யம்! - ஆளுநருக்கு எதிராக கொதிக்கும் ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் ஆய்வுக்கு எதிராகவும் தமிழக அரசின் `போலீஸ்ராஜ்யத்துக்கு’ எதிராகவும் ஆவசமடைந்துள்ளார்.

கடலூர் குளியலரை சம்பவம், நிர்மலா தேவி விவகாரம், சென்னையில் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை ஆநாகரிகமாக தடவிய சம்பவம் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சர்ச்சை மன்னராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு எதிராக சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மாற்றத்துக்கு எதிராக பாஜக-வின் தலித் தலைவர்களே கொதித்தெழுந்தனர்.

இதையொட்டி தமிழகத்தின் முக்கிய தலித் அமைப்புகளும் கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர். இப்படி தனிப்பட்ட முறையிலும், மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பை காட்டவும் ஆளுநரே குறிவைக்கப்பட்டு வருகிறார். இதனால் தான் தொடர்ச்சியாக செய்து வந்த `ஆய்வுகளை’ சற்று ஒதுக்கி வைத்திருந்தார் பன்வாரிலால்.

ஆனால், தற்போது மீண்டும் விருதுநகரில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதனால் கடுப்பான திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முகநூலில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

அவர், `மாநில சுயாட்சி கொள்கைக்கும், மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையிலான அரசியல் சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமாக, ஏற்கனவே மேற்கொண்ட மாவட்ட ஆய்வுகளின் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுடன் மாண்புமிகு ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்துவதற்கு முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில், கழகத்தினரைக் கைது செய்வதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு முன் மாண்புமிகு ஆளுநர் ஆய்வுக்காக சென்ற இடங்களில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்திய போது எல்லாம் அமைதி காத்த தமிழக காவல்துறை, விருதுநகர் மாவட்டத்திற்கு ஆளுநர் செல்லும் போது மட்டும் தி.மு.க.வினரை கைது செய்தது ஏன்? தமிழகத்தில் நடப்பது " போலீஸ்ராஜ்யம்"தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்காட்டவா?’ என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் ஸ்டாலின்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>